Powered By Blogger

Friday, November 7, 2014

கனவுவேட்டை



Inception (2010)

 


 க்ரிஸ்டோஃபர்நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமேமனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் . ‘To be or not to be’ என்ற நிலையில், படத்தின் கதாபாத்திரங்கள் என்ன முடிவெடுக்கின்றன என்பதை வைத்தே இவரது படங்கள் எழுதப்படுகின்றன. அதனாலேயே, இவரது படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசமான முறையில், நமது மனதுக்கு மிக அருகில் வந்துவிடுகின்றனஇவர் எடுத்த படங்களில், இதுவரை எனக்கு மிகப்பிடித்தமான படமாக இருந்தது, ‘ ப்ரஸ்டீஜ்’. (மெமெண்டோவும் பிடிக்கும் என்றாலும், என்னுடைய சாய்ஸ், ப்ரஸ்டீஜ்). ஆனால், அதற்கு மிஞ்சிய படம்ஏன்இதுவரை அவர் எடுத்த படங்களிலேயே பட்டையைக் கிளப்பும் படம் என்று, இன்செப்ஷனைத் தாராளமாகச் சொல்லலாம்.

சரி. அப்புடி என்னய்யா இந்தப் படத்துல பட்டைய கிளப்புது?’ என்றால்….நிறைய இருக்கிறது. முடிந்தவரை, ஒவ்வொரு அம்சமாகப் பார்க்க முயற்சி செய்யலாம்.

மேட்ரிக்ஸ்படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். முற்றாக வேறு ஒரு தளத்தில், எண்ணவோட்டங்களின் நெட்வொர்க் ஒன்றில், அந்த நெட்வொர்க்கில் நாம் இணைக்கப்பட்டவுடன் நடக்கும் ஒரு கதையே அது. அதே போன்றதொரு கதையை, ஒட்டுமொத்தமாகக் கற்பனையே செய்யமுடியாத அளவு பெர்முடேஷன்ஸ் கொண்ட ஒரு தளத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார் நோலன். அது என்ன? மிக எளிமையாக இப்படத்தின் மையக் கருவைப் பார்ப்போம்.
க்ரிஸ்டோஃபர்நோலன்


கனவுகள் !

ஒவ்வொரு மனிதனின் மனதிலும், ஒவ்வொரு விதமான ஆளுமை பதிந்துள்ளது. அந்த ஆளுமையின் விளைவாகக் கனவுகள் நேர்கின்றனஇக்கனவுகளில், பல சமயம், நம்முள் ஒரு எண்ணம் விதைக்கப்படுகின்றது. நம்மையறியாமல் நம் மனதில் விதைக்கப்பட்ட இந்த எண்ணம், சிறிது சிறிதாக நமது செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குகிறது. இந்த அடிப்படைக் காரணத்தை நோக்கியே, நாம் மெதுவாக நமது முடிவுகளை மாற்றியமைக்கத் தொடங்குகிறோம். அதுவே நமது லட்சியமாக மாறிப்போகிறது. அந்த லட்சியம், நமது வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

ஒரு உதாரணமாகச் சொல்லப்போனால், நமதுநித்தியை எடுத்துக்கொள்வோம். என்றோ ஒரு நாள், அவனது மனத்தில் தோன்றிய ஒரு சிறு பொறி (சாமியாருங்க என்னமா எஞ்சாய் பண்ணுறாங்கைய்யா), சிறிதுசிறிதாக அவனது வாழ்க்கையை மாற்றி, போலிச்சாமியாராக அவன் ஆகி, பலவகையில் எஞ்சாய் செய்துவிட்டு, விடியோவும் வெளியாகி, களி தின்றுவிட்டு, மறுபடியும் இப்போது வெளியே வந்து, பேக் இன் ஃபார்ம் ஆகிவிட்டானல்லவா?

இதற்கெல்லாம் மூல காரணம், என்றோ அவன் மனதில் தோன்றிய ஒரு சிறு எண்ணம். இது, நம் எல்லோருக்கும் பொருந்தும்.

ஆகவே, கனவு என்பது, விலைமதிக்கமுடியாத ஒரு விஷயம்.

இங்குதான், இன்செப்ஷனின் மூலக்கரு அமைந்துள்ளது.

படத்தின் கதாநாயகன், காப் (Cobb). காப்பின் தொழில் என்னவென்றால், இப்படிக் கனவுகளில் இருக்கும் முக்கிய விஷயங்களைத் திருடுவது. மட்டுமல்லாமல், அவனால், எத்தகைய மனித மனத்திற்குள்ளும் ஊடுருவிஅங்கு செய்திகளைப் பதிக்க முடியும். இதற்காகவே, அவனோடு ஒரு டீமே செல்படுகிறது.

படம் ஆரம்பிக்கும் நிமிடங்களில், காப், ஒரு கடற்கரையில் அலைகளால் அடித்து வரப்படுகிறான். அங்கு, அவனைத் துப்பாக்கி ஏந்திய சில காவலாளிகள், மிக வயதான ஒரு ஆசாமியிடம் அழைத்துப் போகிறார்கள். காப்பிடம் இருந்து கைப்பற்றிய ஒரு துப்பாக்கியும், இன்னொரு சிறிய வஸ்துவையும், அந்த வயதான மனிதனிடம் கொடுக்கிறார்கள்.

கட். நிகழ்காலம்.  ‘ஸைடோஎன்று ஒரு வியாபார காந்தம். அந்த மனிதனுக்கு, தனது தொழிலில் முக்கியப் போட்டியாளரானராபர்ட் ஃபிஸ்ச்சர்என்ற ஆளை (பேட்மேன் பிகின்ஸில் ஸ்கேர்க்ரோவாக வந்த ஸிலியன் மர்ஃபி) முடக்க வேண்டும். இல்லையெனில், தன்னை மீறிய ஒரு தொழிலதிபராக அவன் வந்துவிடுவான். எனவே, ஸைடோ, காப்பை ஒரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்து, தனக்கு அவன் உதவ வேண்டும் என்றும்அப்படி உதவினால், தனது குழந்தைகளிடம் காப் சென்று சேர உதவுவதாகவும் சொல்கிறான்.

காப், பல வருடங்களாகத் தனது குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வருகிறான். அதற்கு ஒரு இருண்ட காரணம் உண்டு.

எனவே, வேறு வழியில்லாமல் காப் சம்மதிக்க நேர்கிறது

அவர்களது குறிக்கோள் : ஃபிஸ்ச்சரின் கனவுகளில் ஊடுரூவி, அவனது மனதில், தனது நிறுவனத்தை இழுத்து மூடும் எண்ணத்தை விதைக்க வேண்டும்.

ரைட். படத்தின் ப்ளாட் தெளிவாகிவிட்டது. இப்போது, ஃபிஸ்ச்சரின் கனவில் ஊடுரூவ வேண்டுமென்றால், அது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு, கனவுகளில் வருகின்ற சுற்றுப்புறத்தை டிஸைன் செய்யக்கூடிய ஒரு ஆர்க்கிடெக்ட் தேவை. ஏனெனில், ஃபிஸ்ச்சரின் கனவில் சென்று அவனது மனதில் ஒரு எண்ணத்தை விதைக்க வேண்டும் என்றால், அது ஒரு, நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகத்தைப் போன்ற ஒரு விஷயம். அதில் வருகின்ற அத்தனை விஷயங்களையும், முன்னரே முடிவு செய்துகொண்டு, அதன் பின்னரே கனவில் நுழையமுடியும்.

ஆகவே, ஒரு டீம் உருவாக்கப்படுகிறது. கனவினுள் எத்தகைய உருவத்தையும் எடுக்கக்கூடிய திறன் படைத்த ஈம்ஸ், அக்கனவில் வரக்கூடிய சுற்றுப்புறத்தை டிஸைன் செய்யக்கூடிய ஆர்க்கிடெக்ட் ஏரியேன், இவர்களுக்கு உதவும் வகையில், காப்பின் பழைய ஆர்க்கிடெக்ட் நேஷ்கூடவே, ஃபிஸ்ச்சரின் கனவில் நுழைவதற்கு ஏதுவாக, மயக்க மருந்தைக் கலந்து கொடுக்கும் நபர், யூஸுஃப் (திலீப் ராவ். இந்தியர். Drag me to hell படத்தில் நமக்கு அறிமுகமான முகம்).

புதிய ஆர்க்கிடெக்ட் ஏரியேன், ஒரு கல்லூரி மாணவி. அவள், காப்பின் கனவுகளில் நுழைந்து, பயிற்சி எடுக்கிறாள். பலவகையான கனவுகளையும், அவற்றில் வரக்கூடிய சுற்றுப்புறங்களையும் பற்றிப் பயில்கையில், ஒரு திடுக்கிடும் உண்மையைக் கண்டுபிடிக்கிறாள். காப்பின் கனவுகள் அத்தனையிலும் வந்து, அவனது கனவில் சில முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தும் மால் என்ற பெண்ணைப் பற்றிய உண்மை அது. மால், காப்பின் இறந்துபோன மனைவி. அவளது நினைவு, அவனது மனதை விட்டு இன்னமும் அகலாமல் இருப்பதால், அவனது கனவுகளில் மால் அடிக்கடி வருகிறாள்ஆனால், அத்தனை கனவுகளிலும், ஒரே வகையில் மால் நடந்துகொள்ளும் மர்மம் என்ன? அதேபோல், மாலின் நினைவுகள், காப்பின் மனதை ஆழமாக ஊடுரூவியுள்ளதன் காரணம் என்ன?

 

ஓகேடீம் ரெடி. இவர்கள் செய்யவேண்டிய விஷயம், ஃபிஸ்ச்சரின் கனவுகளில் ஊடுரூவி, அவனது மனதில், தனது நிறுவனத்தைக் கலைக்கும் எண்ணத்தை விதைப்பது.

இப்போது, இதனை செயல்படுத்துவது எப்படி? ஃபிஸ்ச்சர் செல்லும் ஒரு விமானத்தில், அவனுடனேயே பயணித்து, அவனது மதுவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, அவனது கனவில் நுழைந்துவிடுகிறார்கள் நமது காப்பும் அவனது டீமும்.

இங்கு, ஒரு சிறிய கணக்கு. நிகழ்காலத்தில் கழியும் காலத்துக்கும், கனவில் கழியும் காலத்துக்கும் வேறுபாடுகள் உண்டுநிகழ்காலத்தில் ஐந்து நிமிட  நேரம் என்றால், கனவில் அது  ஒருமணி  நேரம்இது ஏனெனில், கனவில், நாம் எத்தகைய பரிமாணத்தையும் கடக்க இயலும் என்பதால், இந்த நேர வித்தியாசம் கட்டாயம் நேர்ந்தே தீரும்.

அந்த விமானம் செல்லும் நேரம், பத்து மணி நேரம். ஆகவே, ஃபிஸ்ச்சரின் கனவில் தாங்கள் ஊடுரூவும் வேலையை, இரண்டாகப் பிரிக்கிறார்கள் காப் அணியினர். அதாவது, இந்த எண்ணம் ஃபிஸ்ச்சரின் மனதில் விதைக்கப்படுவதற்கு, ஒரு வாரம். அடுத்து, அந்த எண்ணம் செயல்பட ஆரம்பிப்பதற்கு, பத்து வருடங்கள். அதாவது, கனவுக்குள் நிகழும் காலம் இது. நிகழ்காலத்தில், பத்து மணி நேரத்தில் விமானம் பயணித்து நிற்பதற்குள், இக்காரியம் முடிந்து, அவரவர்கள் வீட்டிற்குச் சென்றுவிடலாம்.



அதேபோல், இன்னொரு விஷயம் என்னவெனில், வழக்கமாக, கனவுகளில் பயணிக்கும்போது மரணம் நேர்ந்தால், நிகழ்காலத்தில் நாம் கண் விழித்துக் கொள்ளலாம். வேறு ஒன்றும் ஆகாது. ஆனால், இந்த முறை, சக்திவாய்ந்த மருந்துகள் உபயோகப்படுத்தப்படுவதால், ஃபிஸ்ச்சரின் கனவில் இருக்கையில் மரணம் சம்பவித்தால், நிகழ்காலத்துக்கு வர இயலாது. அதற்குப் பதில், அண்டவெளியின் ப்ளாக் ஹோல் போன்றதொரு கனவு உலகில் நாம் மாட்டிக்கொண்டு விடுவோம். அதில் இருந்து வெளிவருவதற்கு, பல்லாண்டுகள் ஆகக்கூடும். காப்பின் டீமைச் சேர்ந்தவர்களுக்கு, இவ்வுண்மை சொல்லப்படுவதில்லை. காப்புக்கும், ஆர்க்கிடெக்டான ஏரியேனுக்கும் மட்டுமே இவ்வுண்மை தெரியும் (மர்ம மனிதன் மார்ட்டின் நினைவு வருகிறதா?)

ஃபிஸ்ச்சரின் கனவில் மெதுவாக நுழைகிறார்கள் காப் அணியினர்ஃபிஸ்ச்சரின் கனவில் நிகழும் நாடகம் தொடங்குகிறது.

இதில் இருந்து ஆரம்பித்து, பின்னர் ஜெட் வேகத்தில் செல்லும் கதையில், பல திருப்பங்கள் உண்டு. பல பரிமாணங்களும் உண்டு.

இந்த இடத்தில், படம் பார்க்கும் நண்பர்கள், கனவு எது, நிகழ்காலம் எது என்று பகுத்தறிவது அவசியம். இல்லையெனில், படம் குழப்பு குழப்பு என்று குழப்பிவிடலாம். அதேபோல், படத்தின் தொடக்கத்திலிருந்து நமக்குச் சொல்லப்படும் விஷயங்களை நினைவு வைத்திருப்பது அவசியம்.

படத்தின் துவக்கத்தில் நாம் பார்த்த வயதான மனிதர் யார்? காப்பின் மனைவி இறந்தது எப்படி? ஃபிஸ்ச்சரின் மனதில் நுழைந்த காப்பும் அவனது அணியினரும் சந்திக்கும் அபாயங்கள் என்னென்ன? அவற்றில் இருந்து வெளிவர, காப் செய்யும் வேலைகள் பயனளித்தனவா? காப்பினால் தனது குழந்தைகளுடன் சேர முடிந்ததா?

இக்கேள்விகளுக்கு, படத்தைப் பார்க்க வேண்டியதுதான்.

நாங்கள் பார்த்த தியேட்டரில், ஒலியமைப்பு மிகத்துல்லியமாக இருந்ததனால், இக்கேள்விகளுக்கு விடையாக, படத்தின் வசனங்களில் வரும் விஷயங்கள் எங்களுக்குப் புரிந்தது. ஆனால், அதுவுமே, உற்றுக் கவனித்ததால் மட்டுமே. எனக்குப் புரியாத / கேட்காத சில விஷயங்களை, ஷ்ரீயிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஆகவே, படம் முடியும்போது, தெளிவாக என்னால் வெளிவர முடிந்தது. எனவே, படம் பார்க்கும் நண்பர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது. உற்றுக் கவனியுங்கள். இல்லையேல், படம் உங்களைக் குழப்பி விடலாம். படம் மட்டும் தமிழில் பெங்களூரில் வெளிவந்திருந்தால், அதற்குத்தான் சென்றிருப்போம் (காமிக்ஸ் படித்த எஃபக்ட் கிடைத்திருக்கும்).

ஆனால் சத்தியமாக ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். டோப்பு, சரக்கு, நாட்டுச் சாராயம்  ஆகிய எதை அடித்துவிட்டு யோசித்தாலும், இப்படி ஒரு திரைக்கதை எழுதுவது முடியாத காரியம் என்றே சொல்வேன். குறிப்பாக, ஃப்ஸ்ச்சரின் கனவில் காப் டீம் நுழைந்ததும் நடக்கும் நிகழ்வுகள் !! அட்டகாசம்!

படத்தைப் பாருங்கள். நிகழ்காலத்தின் அதிமுக்கியமான இயக்குநராக க்ரிஸ்டோஃபர் நோலன் இப்படத்தின் மூலமாக உருவாகிவிட்டார் என்றே தோன்றுகிறது.
 

No comments:

Post a Comment