Powered By Blogger

Thursday, November 6, 2014

கைமாறும் முதலிடம் காரணம் என்ன?

ஆப்பிள்.....நோக்கியா... சாம்சங்... மோட்டோரோலா....மைக்ரோமேக்ஸ்...




செல்போன்கள் நம் நாட்டில் நுழைந்த காலத்தில், நோக்கியா நிறுவனம் தயாரித்த செல்போன்கள்தான் முதலிடத்தில் இருந்தது. 

அதிக எடையுள்ள கீ-பேடு உள்ள செல்போன் பயன்படுத்திய திலிருந்து மாறி, இன்று ஸ்லிம்-டச் ஸ்கிரீன் செல்போன்களுக்கு நம் வாடிக்கையாளர்கள் மாறிவிட்டார்கள்.
டிசைன், சைஸ், துல்லியமான கேமரா, டபுள் சிம்/டிரிபிள் சிம் என பல்வேறு வசதிகளைப் போட்டிப் போட்டுக் கொண்டு தருவதால், புதிய செல்போன் நிறுவனங்கள் பழைய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பந்தயத்தில் முன்னணியில் நிற்கின்றன. நோக்கியா, சாம்சங், மைக்ரோமேக்ஸ் என போட்டியில் மல்லுக்கட்டி நிற்கும் இந்த நிறுவனங்கள் எப்படி தங்களை நம் நாட்டில் நிலைப்படுத்திக் கொண்டன, எப்படி மாறி முதலிடத்தைப் பிடித்தன என்பது பற்றி சொல்கிறார் தொழில்நுட்ப வலைபதிவாளரான சைபர்சிம்மன்.

‘‘இன்று செல்போன் என்பது அனைவருக்கும் அத்தியாவசியம் தேவைப்படும் பொருட்களில் ஒன்றாகி விட்டது. அதிலும் நாம் எந்தத் தொழில் நுட்பம் உள்ள செல்போன் வைத்திருக் கிறோம் என்ற அளவுக்கு மாறிவிட்டது இன்றைய தொழில்நுட்ப செல்போன் உலகம். செல்போன் உலகில் முதலிடம் என்பது நிரந்தரமற்றது. புதுமைகளும், வித்தியாசங்களும் அதிவேகமாக மாறிவரும் துறை என்பதால் இதில் முதலிடம் என்பது கைமாறிக் கொண்டேதான் இருக்கும்.
செல்போன் மார்க்கெட்  அதிகம் நம்பியிருப்பது நடுத்தர வருமானம் கொண்ட நபர்களைத்தான். அதிக விலை கொடுத்து வாங்கும் ஆப்பிள் போன்களை மிகச் சிலர்தான் விரும்புகிறார்கள்.

செல்போன் பயன் பாட்டைத் துவங்கிய காலத்திலிருந்து நீண்ட காலத்துக்கு விற்பனையில் முன்னணி வகித்த நிறுவனம் நோக்கியாதான். காரணம், அறிமுகத்தில் நல்ல தரத்திலும் மக்களுக்குப் புரியும்படியான யூசர் ஃப்ரெண்ட்லி செல்போன்களை அறிமுகப்படுத்தியது நோக்கியாதான். ஏறக்குறைய அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்திய செல்போன் நிறுவனம் என்றே சொல்லலாம். கேமரா, மியூசிக் என அனைத்து வசதிகளோடும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய முதல் செல்போனாகவும் நோக்கியா இருந்தது.

ஆனால், தொழில்நுட்பம் என்கிற விஷயத்தில் நோக்கியா நிறுவனம் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இதேசமயத்தில் தான் மற்ற செல்போன் நிறுவனங்களும்  செல்போன் மார்க்கெட்டை நோக்கி படையெடுக்கத் துவங்கின. வெளிநாடுகளில் மட்டுமே இருந்த தொழில்நுட்பமாகக் கருதப்பட்ட தொடுதிரை செல்போன்கள் எனப்படும் டச் ஸ்கிரீன் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகத் தொடங்கின. ஏற்கெனவே சிறிய அளவில் சாதாரணக் கீ-பேடு போன்களை விற்பனை செய்துவரும் பிரிவில் இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனை கொண்டு வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.
டச் ஸ்கிரீன் செல்போனிலும், இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனிலும் கால்பதிக் காமல் இருந்தது நோக்கியா. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சாம்சங் இந்தப் பிரிவுகளில் தன்னை நிலைபடுத்திக் கொண்டது. புதிய தொழில்நுட்பம், புதிய செயல்பாட்டு அமைப்பு என்ற அடிப்படையில் இந்தியர்களின் ஸ்மார்ட்போன் மனநிலையைப் புரிந்துகொண்டு தன்னைப் பலப்படுத்திக் கொண்டது சாம்சங். நோக்கியா தொழில்நுட்பத்தில் தவறவிட்ட இடத்தைப் புதிய தொழில்நுட்பத்தால் பிடித்தது சாம்சங்!
பழைய சிம்பியான் (SYMBIAN) ஓஎஸ்களைப் பயன்படுத்தி வந்தவர் களுக்குத் தெரிந்திருந்த அடுத்தத் தொழில்நுட்பமாக ஐஓஎஸ் (iOS) தான் இருந்தது. அது அனைவராலும் பயன்படுத்த முடியாத விலை அதிகமுள்ள ஆப்பிள் போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்ட்ராய்டு ஓஏஸ்களுடன் சாம்சங் டச் ஸ்கிரீன் மொபைலை அறிமுகப்படுத்தி விற்பனையில் நோக்கியாவை முந்தியது.
சாம்சங் நல்ல தொழில்நுட்பத்தை வழங்கினாலும் சற்று விலை அதிகமுள்ள செல்போனாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நேரத்தில்தான் சீனாவின் செல்போன் நிறுவனங்களும், இந்திய செல்போன் நிறுவனங்களும் வரத் தொடங்கின. குறைந்த விலையில் செல்போன்களை வழங்கத் துவங்கின. வருமானம் குறைவாக உள்ளவர்களாலும் செல்போன்களை வாங்க முடியும் என்ற நிலை ஆரம்பிக்கத் துவங்கியது ஆனால், சரியான தரத்தை இந்த நிறுவனங்களால் வழங்க முடியவில்லை.
அப்போது குறைந்த விலையில் ஓரளவுக்கு நல்ல தரத்தில் ஒரு நிறுவனம் வந்தால் அதனால் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறமுடியும் என்ற நிலை இருந்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது மைக்ரோமேக்ஸ்.



 சாம்சங் தரும் அதே தொழில்நுட்பம் நோக்கியாவை போன்ற யூசர் ஃப்ரெண்ட்லி அமைப்பு, குறைந்த விலை என வாடிக்கையாளரை முழுமையாகத் திருப்திப்படுத்தும் விதத்தில் அமைந்தது மைக்ரோமேக்ஸ். அதிகமாக செல்போன் விற்பனையாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவரும் நிலையில் இந்தியர்களின் மனநிலைக்கு ஏற்ற செல்போனை விற்கும் இந்திய நிறுவனம் ஒன்று விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது ஆச்சர்யம்தான்!
ஆனாலும், ஏற்கெனவே சொன்னது மாதிரியே இந்த இடம் நிரந்தரமற்றது. நோக்கியா நிறுவனம், மைக்ரோ சாஃப்ட் ஒப்பந்தம் மூலம் கணினிகளில் உயயோகப்படுத்தப்படும் விண்டோஸ் தொழில்நுட்பத்தோடு களமிறங்கி இருக்கிறது. 


சாம்சங் இன்றும் ஸ்மார்ட் போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாகவே உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்களும் போட்டியில் உள்ள நிலையில் இந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள, மைக்ரோமேக்ஸும் போராடும். அதனால் மார்க்கெட்டில் செல்போன் நிறுவனங் களின் போட்டி தொடரும்’’ என்றார்.
அழைப்புகளுக்காவும், குறுஞ்செய்தி களுக்காவும் மட்டும் இருந்துவந்த செல்போன்கள், இன்று எங்கு செல்வது எனக் காட்டும் மேப் வசதி, இன்டர்நெட் வசதி என பல்வேறு வசதிகளை வழங்கும் ஆப்ஸ்கள் என செல்போன் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாறிவிட்ட நிலையில், இந்தப் போட்டி கள் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான களத்தை உருவாக்கி யுள்ளது.

ஸ்மார்ட் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள்!
செல்போன் உலகில் நிலவும் போட்டியைச் சமாளிக்க, செல்போன் நிறுவனங்கள் புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளன. கடைகள் மூலமாக அவர்கள் சென்றடையும் வாடிக்கையாளரின் அளவு குறைவாக உள்ளது என இந்த நிறுவனங்கள் நினைப்பதால் இ-காமர்ஸ் துறையைக் கையில் எடுத்துள்ளன சில நிறுவனங்கள். குறிப்பாக, மோட்டோரோலாவின் மோட்டோ-இ, ஷியோனி எம்ஐ3 போன்ற செல்போன்கள் ஆன்லைனில் மட்டும்தான் கிடைக்கும் என்பதால் அதற்கான புக்கிங்குகள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்துவிடுகின்றன. 

இதெல்லாம் செயற்கையாகச் செய்யப்படும் ஹைப் (hype)தான். இதை நிஜமென்று நம்பத் தேவையில்லை என்று விமர்சனம் செய்கிற நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. ஆக, வாடிக்கையாளர்கள் உஷாராக இருப்பது அவசியம்!




ஒரு மாணவன் பரீட்சை எழுதுகிறான். அதைப் பார்த்து இன்னொரு மாணவன் காப்பி அடிக்கிறான். இந்த இரண்டுமே செய்யாமல் பின்னால் உட்கார்ந்திருக்கும் மாணவன் தலையைப் பிய்த்துக்கொள்கிறான். இதில் பரீட்சை எழுதும் மாணவன், ஆப்பிள்; காப்பி அடிக்கும் மாணவன், சாம்சங்; தலையைப் பிய்த்துக்கொள்ளும் மாணவன், நோக்கியா.
இப்படி ஒரு இமேஜ் சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் பல ஆயிரக் கணக்கான லைக்குகளையும், ஷேர்களையும் அள்ளியது.


 இதில் காப்பி அடிப்பதாக சொல்லப்படும் சாம்சங்தான் இன்று ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் ஆப்பிளையும் விஞ்சி நிற்கிறது.
முடிந்த  காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 37.4 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்றது. இதே காலகட்டத்தில் சாம்சங் சுமார் 70 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்றது. மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் பங்கு 17 சதவிகிதம். ஆனால், சாம்சங் 32 சதவிகித சந்தையை கையில் வைத்திருக்கிறது.
ஸ்மார்ட்போனை உருவாக்கியதில் முன்னோடி ஆப்பிள்தான். போனில் ஒரே ஒரு பட்டன்தான் இருக்கவேண்டும் என்பதை அடிப்படையாகக்கொண்டு ஸ்மார்ட் போன் கான்செப்டை உருவாக்கிய ஆப்பிள் இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஆப்பிளின் மார்க்கெட்டை சாம்சங் எப்படி கைப்பற்றியது என்பது குறித்து கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டின் செயல் இயக்குநர் மற்றும் ஸ்ட்ராடஜி பேராசிரியருமான ஸ்ரீராமிடம் கேட்டேம். இந்த ஸ்மார்ட் போன் யுத்தம் பற்றி விரிவாக நம்மிடம் பேசினார்.
விலை குறைவு:
நோக்கியா உள்ளிட்ட சாதாரண போன்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடனும் போட்டி போடவேண்டும். அதேசமயம், ஆப்பிள் மாதிரி ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்களுடனும் போட்டியிடவேண்டும் என்று முடிவு செய்த சாம்சங், அந்த வேலையை சிறப்பாகவும் செய்து வருகிறது.
சாம்சங் என்பது ஒரு பொருள் தயாரிக்கும் நிறுவனம் அல்ல. அது காங்லோமெரேட்

. பல பிஸினஸ்கள் அதற்கு இருக்கிறது. அதில் ஒரு பிஸினஸ் எலெக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் தயாரிப்பது. இந்த பாகங்களை ஆப்பிள் நிறுவனத்துக்கும் விற்று வருகிறது. ஒருகட்டத்தில் ஆப்பிள் அதிகளவு உதிரிபாகங்களை வாங்குவதால், ஸ்மார்ட் போன்தான் அடுத்த மார்க்கெட் என்பதை சாம்சங் புரிந்துகொண்டது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் சாம்சங்குக்கு மூலப்பொருட்களின் செலவும் குறைவு. மேலும், இது பெரிய நிறுவனம் என்பதால் ஒரேசமயத்தில் அதிக அளவு யூனிட்களைத் தயாரிக்க முடியும். கடன் கிடைப்பதிலும் பிரச்னை இருக்காது, அதுவும் குறைந்த வட்டியில். இதனால் குறைவான விலையில் ஸ்மார்ட் போனைத் தயாரிக்க சாம்சங்கினால் முடிந்தது.
டெக்னாலஜி!

2008-09-ல் கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வெளியிட்டது. அந்த ஆபரேட்டிங் சிஸ்டம் எப்படி இயங்கும் என்று தெரியாதபோதும்கூட துணிச்சலாக ரிஸ்க் எடுத்து அந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போன்களைத் தயாரித்தது சாம்சங். ஆண்ட்ராய்டு ஓ.எஸ். இருப்பதினால், வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ, அந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்துகொள்ளலாம். 

மேலும், யார் வேண்டுமானாலும் புதிய அப்ளிகேஷனை உருவாக்கி கூகுளில் ஏற்ற முடியும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு நிறைய சாய்ஸ் இருக்கிறது. அதனால், சாம்சங் தயாரித்த போனை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், ஆப்பிள் போன்களில் அந்நிறுவனம் தரும் அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இடத்துக்கு தகுந்தாற்போல் மாறவில்லை என்றால் ஜெயிக்க முடியாது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். கோகோகோலா விளம்பரங்கள் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், இந்தியாவில் மார்க்கெட்டைப் பிடிக்கவேண்டுமானால், இந்தியாவுக்கு ஏற்ற விளம்பரங்களைத் தயாரித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்ப விளம்பரங்களை வெளியிட்டது. அதேபோல, மெக்டொனால்ட்’ஸ் நிறுவனம் அசைவ உணவுகளை மட்டுமே விற்று வந்தது. ஆனால், இந்தியாவுக்கு வந்தவுடன் அது மட்டும் போதாது என்பதால் சைவ உணவுகளையும் விற்றது. ஆனால், ஆப்பிள் எந்த மாற்றத்தையும் கொண்டுவராமல் உலகம் முழுக்க ஒரேமாதிரியாக இருக்கிறது. ஆப்பிள் சிறந்த போன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அனைவருக்கும் ஏற்ற விதத்தில் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
மார்க்கெட்டிங்!
குறைந்த செலவில் போனைத் தயாரிப்பதால் மார்க்கெட்டிங்குக்கு அதிக செலவு செய்கிறது சாம்சங். இந்த  செலவை ஒரு முதலீடாகவே பார்க்கிறது. ஆப்பிள் நிறுவனம் மார்க்கெட்டிங்குக்கு செய்யும் தொகையைவிட சுமார் 4 மடங்குக்கு மேல் அதிகம் செலவு செய்கிறது சாம்சங்.
நேரம்!
சாம்சங்கை 'ஸ்மார்ட் ஃபாலோயர்’ என்று சொல்லலாம். பல கஷ்டங்களுக்குப் பிறகு ஸ்மார்ட் போனை தயாரித்தது ஆப்பிள். ஆனால், பெரிய கஷ்டம் இல்லாமல் சாம்சங் அதை தயாரித்து வெற்றி கண்டுவிட்டது. இதனால், சாம்சங்குக்கு நேரமும், பணமும் மிச்சம். ஆனால், இந்த கண்டுபிடிப்புக்காக அதிக முதலீடு செய்த ஆப்பிளால் விலையைக் குறைக்க முடியவில்லை. வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் போனை தயாரித்து கொடுத்தது ஆப்பிள்; ஆனால், வாடிக்கையாளர் எளிதல் பயன்படுத்தக்கூடிய, அவர்களுக்கு ஏற்ற போனை தயாரித்து தந்தது சாம்சங்''
வாடிக்கையாளர்கள்தான் எஜமானர்கள் என்பதைப் புரிந்துகொண்டால், சாம்சங் மாதிரி எல்லா நிறுவனங்களாலும் நிச்சயம் ஜெயிக்க முடியும்!

தொடரும் சாம்சங், ஆப்பிளின் வீழ்ச்சி!
ஸ்மார்ட்போன் விற்பனையில்   நிறுவனங்களின் போட்டி அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமின்றி சீனாவின் செல்போன் நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களுக்கு நிகராக அவற்றைவிட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதால் தற்போது சரிவில் உள்ள முன்னணி நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஆப்பிளின் சந்தை பங்களிப்பு வரும் 2015-ம் ஆண்டில் முறையே 31 மற்றும் 15 சதவிகிதமாக குறையும் என பிட்ச் தரவரிசை நிறுவனம் கணித்துள்ளது. உலக ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 5 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில் அதில் 15 சதவிகிதத்தை சீனாவின் ஷியோமி நிறுவனம் பிடித்துள்ளது. இது சாம்சங்கின் 12 சதவிகிதத்தைவிடவும் அதிகம்.
 

No comments:

Post a Comment