Powered By Blogger

Friday, February 24, 2017

ஸ்டீவ் ஜாப்ஸ்!


Steve Jobs
1990க்கு முந்தைய தலைமுறை வரைக்கும் தான் ஆப்பிள் என்றது நியூட்டனை நினைவு கூறும். அதற்கு பின் வரும் அனைவருக்குமே ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் நினைவுக்கு வருவார் என்ற வாக்கியம் எப்போதுமே இணையத்தில் வைரல். புதுமை என்ற விஷயம் ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்பிலும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஜாப்ஸை கேட்டால் புதுமை என்று எதையுமே கூறிவிட முடியாது. அடுத்த நொடியே இதைவிட புதுமையான விஷயம் உருவாகிவிடும் என்பாராம். இன்றைய ஸ்மார்ட்போன் உலகின் வீரியத்தை முன்பிலிருந்தே உலகுக்கு எடுத்து சொன்ன ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்கள்.
1. 1955ம் ஆண்டு சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தவர் ஜாப்ஸ். பிறந்தவுடன் தன் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பால் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர்களிடம் ஜாப்ஸ் மகிழ்ச்சியாக வளர்ந்தாலும், தான் தத்துப்பிள்ளை என்பது ஜாப்ஸுக்கு அடிக்கடி வருத்தமளிக்கும் விஷயமாகவே இருந்துள்ளது. படிப்புக்காக தத்து கொடுக்கப்பட்ட ஜாப்ஸ் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர்.
2. எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் ஆர்வம் கொண்ட ஜாப்ஸால் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. அதோடி கல்வியில் சுதந்திரம் வேண்டும் என்று விரும்பியவர் ஜாப்ஸ். பிற்காலத்தில் வரைகலை பயின்ற ஜாப்ஸ் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களை தானே வடிவமைத்தார்.
Steve Jobs
3. படிப்பை விட்ட காலத்தில் நண்பர்களின் அறையில் தங்கி இருந்த ஜாப்ஸ் நீண்ட தொலைவுகளுக்கு நடந்து சென்றும், பசியால் வாடும் நேரத்தில் ஹரே கிருஷ்ணா கோவிலில் உணவு உண்டும் தனது காலத்தை கழித்துள்ளார்.
4. 1974ம் ஆண்டில் தலையில் நீண்ட முடியோடு, இந்தியாவில் இமையமலைப்பகுதிகளில் ஆன்மீக தேடலில் இருந்த ஜாப்ஸுக்கு தோல் நோய்கள் வந்துள்ளது. மேலும் கடும் புயலில் சிக்கி கொண்ட ஜாப்ஸ் ஆன்மீக தேடலை கைவிட்டு அறிவியல் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இல்லையென்றால் இந்தியாவில் சாமியாராகி இருப்பார் ஜாப்ஸ்.
Steve Jobs
5. ஆப்பிள் 1 கணினிக்கு பின்னால் அவர் நிகழ்த்திய மேஜிக் அளப்பறியது. தனது நண்பருடன் இணைந்து ஆப்பிள் 1 கணினியை உருவாக்கிய ஜாப்ஸ் அதனை ஒரு வீடியோ கேம் கணினிகளை விற்கும் ஃபைட் ஷாப் உரிமையாளரிடம் விளக்கினார். அவர் ஒரு மாதத்தில் 50 கணினிகள் வேண்டும் என ஆர்டர் தர இதனை ஒப்பந்தமாக எழுதி வாங்கி, அந்த ஒப்பந்தத்தை காட்டி மூலப்பொருட்களை கடனில் வாங்கி கணினியை தயாரித்துள்ளார் ஜாப்ஸ். 
6. 1985ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஜாப்ஸ். தளராமல் பிக்ஸார் அனிமேஷன் நிறுவனம் மூலம் ஹிட் அடித்தார். ஆப்பிள் நிறுவனமே வீழ்ச்சிக்கு சென்ற நிலையில் ரீ-என்ட்ரி கொடுத்து ஆப்பிளை முன்னணி பிராண்ட் ஆக்கினார் ஜாப்ஸ்.
Steve Jobs
7. ஜாப்ஸ் ஒரு சிறந்த வழிகாட்டி. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மூடிவிடலாம் என்று முடிவில் இருந்த போது இந்தியா சென்றுவிட்டு வா ஒரு ஐடியா கிடைக்கும் அவசரப்பட்டு நிறுவனத்தை மூடிவிடாதே என அறிவுரை கூறி மார்க்கை இன்று உலகின் நம்பர் 1 மனிதனாக மாற்றியதும் ஸ்டீவ் ஜாப்ஸ்தான்.
8. ஜாப்ஸ் ஒரு பெஸ்டேரியன் (pescetarian) அதாவது மீன் தவிர மற்ற மாமிசங்களை உண்ணாதவர். வாழ்நாளில் 7 மாதங்கள் தீவிரமாக புத்த மதத்தை பின் தொடர்ந்தவர் ஜாப்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Steve Jobs
9. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரஷ்யாவின் பங்குச் சந்தையை விட அதிகம், ஆப்பிளின் செயல்பாட்டு கையிருப்பு அமெரிக்காவின் கஜானாவை விட அதிகம் என்பதும் ஆப்பிளின் மிகப்பெரிய சிறப்பு.
10. ஆப்பிள் ஐபோன்களை ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உலகுக்கு அறிமுகம் செய்தார். முதன் முதலில் 9:41 மணிக்கு இந்த போன்களை அறிமுகம் செய்ததால் அனைத்து ஐபோன்களும் வெளியிடப்படும் மாடல்கள் மற்றும் போன்களின் புகைப்படங்களில் 9:41 என்ற மணியையே காட்டும். 

Wednesday, February 8, 2017

ஆட்டிசம் தவிர்க்க பல்லுயிர் நேயம் அவசியம்!

ட்டிசம், கவனக்குறைவு நோய், அஸ்பெர்கர் நோய் (Asberger Syndrome), இன்னும் இன்னதென வரையறுக்க முடியாத நோய்களால் (Pervasive Development Disorder) பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உலகம் முழுக்க அதிகரித்துவருகிறது. 2014-ம் ஆண்டு கணக்குப்படி, உலக மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்கள்; அமெரிக்காவில் 68 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசம் பாதிப்போடு பிறக்கிறது. 
ஆட்டிசம்
இந்தியாவில், 2012-ம் ஆண்டு கணக்குப்படி, ஒரு கோடி பேருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது; பிறக்கும் 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் (Autism Spectrum Disorder) பிரச்னையோடு பிறக்கிறது. இது கவலையளிக்கக்கூடிய விஷயம். ஆட்டிசத்துக்கான தெளிவான காரணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. `மரபணுக்களின் சீரற்ற நிலை, சுற்றுச்சூழல் மாசு, காற்றில்... மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்களும், கனிமங்களும் காரணங்களாக இருக்கலாம்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். 
`ஒண்ணேகால் வயசு வரைக்கும் ஒழுங்காத்தான் இருந்தான். `அம்மா, அப்பா’னுகூட அழகாச் சொல்லிட்டுதான் இருந்தான். ஒண்ணரை வயசுக்கு அப்புறம்தான் சேட்டை கூடிப் போச்சு. ஒரு இடத்துல இருக்க மாட்டேங்குறான். ஒண்ணு, எல்லாப் பொருளையும் அடுக்கிவெச்சுட்டே இருக்கான். இல்லைனா, தூக்கி எறியறான். அவனை அடக்கவே முடியலை. பேச மாட்டேங்கிறான். படிக்க மாட்டேங்கிறான்...’ - இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளுடன் வரும் குழந்தைகளைப் பாதித்திருப்பது `ஆட்டிசம்’ எனும் நோய். 
ஆட்டிசம் ஏன்... எப்படி?
ஆட்டிசம், இரண்டு வயதுக்கு முன்னால் பெரும்பாலும் கணிக்கப்படுவது இல்லை. தாய் பாலூட்டும்போது குழந்தையுடன் கண்களால் பேச வேண்டும். தாயின் கண்ணசைவுக்கும் முக பாவனைக்கும் குழந்தை பதிலுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவேண்டியது மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. `மூணாம் மாசத்துல குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும்’ எனப் பாட்டி சொல்வது அனுபவம் மட்டும் அல்ல... அறிவியல். `இப்படி முகம் பார்க்காமல், கண்களைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருக்கலாம்’ என்கிறது நவீன அறிவியல். 
`ஆம்பிளைப் புள்ளை மெதுவாத்தான் பேசும். பொண்ணுங்க எப்பவுமே ரொம்ப சீக்கிரம் எட்டு மாசத்துல பேசிடுவாங்க’ எனச் சொல்லி, இரண்டரை வயது வரை பேசாமல் இருக்கும் தன் மகனுக்கு ஆட்டிசமோ, அதை ஒட்டிய நோய்த்தொகுப்போ இருப்பதைப் பெரும்பாலான பெற்றோர்கள் கணிக்கத் தவறிவிடுவார்கள். அந்தத் தாமதம், குழந்தையை முழுமையாகச் சீராக்கத் தரும் பயிற்சிக்குப் பெரும் தடையாக இருக்கும். 
சிறுவன்
இலக்கியத்தில் நம்மாழ்வார், அறிவியல் உலகின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோர் ஆட்டிசம் நோயால் பாதித்தவர்கள் என்று சில வரலாற்றுத் தகவல்கள் உண்டு. ஆனால், அனைத்து ஆட்டிசக் குழந்தைகளும் அப்படி அல்ல. அதனால் அவர்களுக்கு வெகு விரைவில் பயிற்சி தொடங்கப்பட வேண்டும். 
தன்னுடைய ஐம்புலன்களையும், தடுமாற்றம் இல்லா நிலையும் (Vestibular Sense), தன் மூட்டுகளை ஒருங்கிணைத்து ஓடியாடும் திறனிலும் இந்தக் குழந்தைகளுக்குச் சங்கடங்கள் இருப்பதால், சுற்றியிருக்கும் சூழலுக்கு இசைவாக அவர்களால் இத்தனையையும் ஒருங்கிணைத்துச் செய்ய முடியாது. ஒவ்வொரு புலனும் தனித்தனியே அதிகபட்ச ஆளுமையுடன் இருப்பதும் மிக முக்கியக் காரணம். ஹோவர்டு கார்டனர் (Howard Gardner) எனும் உளவியல் விஞ்ஞானி ஒன்பது வகை அறிவாற்றலை விளக்குகிறார். 
இயற்கையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அறிவாற்றல் (Naturalistic Intelligence), இசை அறிவாற்றல் (Musical Intelligence), கணக்கிடும் அறிவாற்றல் (Mathematicallogical Intelligence), ஏன் பிறந்தோம், மரணத்துக்குப் பின் என்ன என உள்ளார்ந்த தத்துவத் தேடல்கொண்ட அறிவாற்றல் (Existential Intelligence), பிறரிடம் முழுப் புரிதலுடன் இருக்கும் அறிவாற்றல் (Interpersonal Intelligence), நடன உடலசைவு குறித்த அறிவாற்றல் (Body Kinesthetic Intelligence), மொழி அறிவாற்றல் (Linguistic Intelligence), உளவியல் அறிவாற்றல் (Intrapersonal Intelligence), முப்பரிமாணத்தில் சிந்திக்கும் அறிவாற்றல் (Spatial Intelligence) ஆகியவையே அந்த ஒன்பது திறமைகள். 
ஒரு மனிதனுக்கு, இதில் ஏதாவது ஒன்றோ, பலவோ கண்டிப்பாக இருக்கும். ஆனால், அதை ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்துக் கணிக்க முடியாது. ஐக்யூ டெஸ்ட்டில் மிகவும் பின்தங்கியுள்ள பலர், இந்த அறிவாற்றல் சிலவற்றில் அதீதத் திறமையுடன் விளங்குவதை உலகம் பார்த்திருக்கிறது. இந்த ஒன்பது திறமைகளில் எது ஒரு குழந்தையிடம் ஒளிந்திருக்கிறது... எந்தப் புலனில் அவனுக்கு / அவளுக்கு ஆளுமை அதிகம் எனக் கண்டறிய பள்ளிகளுக்கு நேரம் கிடையாது: அதற்கென மெனக்கெடுவதும் கிடையாது. அம்மா, அப்பாவுக்குத்தான் அந்தக் கடமை இருக்கிறது. 
100 பொருட்கள் இருக்கும் இடத்தில், ஒன்று மட்டும் மாறுபாடாக இருந்தால், சில ஆட்டிசக் குழந்தைகள் கண நேரத்தில் அதைச் சரியாகக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் பெற்றிருப்பார்கள். பொதுவாக, கூட்டு விளையாட்டில் பிரகாசிக்க முடியாத இவர்கள், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் முதலான தனி விளையாட்டுகளில் எக்குத்தப்பான திறமையுடன் இருப்பார்கள். அவர்களை உரிய முறையில் முடுக்கிவிட்டால், ஆட்டிசக் குழந்தைகளில் இருந்தும் ஒரு உசேன் போல்ட்டையோ, வான்காவையோ உருவாக்க முடியும். 
குழந்தை
ஆட்டிசக் குழந்தைகளுக்கான உணவுகள்... 
* இவர்களின் பராமரிப்பில் உணவுப் பழக்கத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, குளூட்டன் சத்துள்ள மைதா மாவில் செய்யப்படும் உணவுகளும், கேசின் புரதம் அதிகம் உள்ள பாலும் இவர்களுக்கு நல்லதல்ல. `ஆட்டிசக் குழந்தைகளுக்கு அந்தப் புரதச்சத்துகள் அமினோ அமிலமாகப் பிரிவதற்கு முன்னரே, அரைகுறை நிலையிலேயே குடலில் உறிஞ்சப்படுவதால், ஆட்டிச நோயின் மூளைத் திறனில் பாதிப்பு அதிகம்’ என்கின்றனர் அறிவியலாளர்கள். 
* குளூட்டன் புரதம் இல்லாத பாரம்பர்ய அரிசி ரகங்கள், சிறுதானிய உணவுகள் அவர்களுக்குச் சிறந்தவை. 
* பெஞ்சமின் ஃபெய்ன்கோல்டு (Benjamin Feingold) என்ற மருத்துவர் எந்த அளவுக்கு வண்ணமூட்டி ரசாயனங்களும், பிரிசர்வேட்டிவ்களும், ஆட்டிசத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை ஆய்வில் விளக்கியிருக்கிறார். இப்போது ஃபெய்ன்கோல்டு உணவுமுறை மேலை நாடுகளில் ஆட்டிச நோய்க்கான பிரத்யேக உணவாக இருக்கிறது. பாரம்பர்ய உணவு வகைகளின் சாரம்தான் அது. 
* சித்த மருத்துவ நூற்குறிப்புகளில், ஆட்டிசத்தை ஒட்டிய கருத்துகள் அதிகம் இல்லை. அன்றைய ரசாயனம் இல்லா வாழ்க்கை, குளூட்டன் இல்லா பாரம்பர்ய உணவு, பதற்றம் இல்லா வாழ்வியல் ஆகியவையே இந்த நோயைத் தரவில்லை. 
ஆட்டிசம் சொல்லும் பாடங்கள் நிறைய. காற்றிலும், மண்ணிலும், நீரிலும் கழிக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத கசிவுகளை தினம் தினம் சுவாசித்து வாழ்கிறோம். நாளைய நம் சந்ததிக்கு இந்தத் துணுக்குகளை விட்டுச் செல்கிறோம் என்பதுதான் எபிஜெனடிக்ஸ் (Epigenetics) எனும் வளர்ந்துவரும் மருத்துவ அறிவியல் துறை சொல்லும் உண்மை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பழக்கம் மட்டுமே இந்தப் புவியையும் நம்மையும் இவற்றிலிருந்து பாதுகாக்கும்!