Powered By Blogger

Thursday, November 13, 2014

கோட்சே ஒரு மனநோயாளியா?... – மறைக்கப்பட்டதொரு வரலாறு!



கோட்சே
பெரும்பாலும் உலக வரலாறுகளில் மக்களால் கொண்டாடப்பட்ட தலைவர்களின் தகவல்கள் மட்டுமே காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. வரலாற்றில் குறிப்பிடத்தக்க சில எதிர்மறை நிகழ்வுகளை நிகழ்த்தியவர்கள் கெட்டவர்கள் என்ற ஒரே வரியோடு அமுக்கப்பட்டு அவர்கள் தரப்பு நியாயங்களை வரலாற்றின் இன்னொரு பரிமாணத்தில் பார்க்கும் நிகழ்வுகள் அரங்கேறாமலேயே போகிறது. உலகம் முழுக்கவும் இதற்கான உதாரணங்கள் ஏராளம் அடுக்கலாம்.

மகாத்மா என்றழைக்கப்படும் நமது தேசத்தந்தை காந்தியின் செயல்பாட்டின் மீது நான் கற்ற வரலாறுகளின் அடிப்படையில் சிறுவயதிலிருந்தே எனக்குள் எதிர்மறை எண்ணங்கள் தானாகவே தோன்றியதன் காரணம் எனக்கு புரிந்ததேயில்லை. வளர வளர அந்த எதிர்மறை எண்ணங்கள் இன்னும் பக்குவம் அடைந்ததே தவிர மாறவேயில்லை...

கோட்சேவின் கடைசி வாக்குமூலத்தை படித்தபிறகு நிஜமாகவே வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வின் இன்னொரு பரிமாணம் காலம் காலமாக மறைக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்.

எந்த விஷயமாக இருந்தாலும் அதை அந்தந்த நபர்களின் பார்வையில் அணுகும்போது அதன் பரிமாணங்கள் பலவிதமானதாகவே இருக்கும். இதில் வரலாற்று நிகழ்வுகள் என வரும்போது அதிகாரம் மற்றும் பெரும்பான்மை அடிப்படையிலான பரிமாணம் மட்டுமே அழுத்தம் பெறவைக்கப்படுகின்றன.

காந்தி சுடப்பட்ட நாள்முதல் இன்று வரையிலும்கூட கோட்சேவை ஒரு மனநோயாளியாக, சைக்கோவாக எண்ணும் நபர்களும், சித்தரிக்கும் நபர்களும்தான் பெரும்பான்மை சமூகம். கோட்சே கெட்டவன் என்பதும், காந்தி மகாத்மா, தேசத்தந்தை என்பதுவும் அடுத்தடுத்து வந்த தலைமுறைக்கு சிறுவயது முதலே பயிற்றுவிக்கப்பட்ட வரலாற்றின் அடிப்படையிலான எண்ண ஊட்டல்கள் மட்டுமே...!

பிரசித்திபெற்ற தலைவர்களின் இன்னொரு முகத்தையும், அவர்களின் கறுப்பு பக்கங்களையும், அவர்களின் குறைகள் மீதான சுட்டிக்காட்டலையும் தெரிவிக்க விரும்பும் கருத்துக்கள் தேசத்துக்கு எதிரானவையாகவும், கீழ்த்தரமானவையாகவும்... அதன் நபர்கள் தேசபக்தி இல்லாதவர்களாவும் சித்தரிக்கப்படுவதுதான் இங்கே ஆண்டாண்டு காலமாக உறுத்திக்கொண்டிருக்கும் நிகழ்வுகள்...

மகாத்மா காந்தியின் தவறுகளை விமர்சித்து எழுத இங்கே எத்தனை பேருக்கு தைரியமிருக்கிறது என்பது கேள்விக்குறிதான்...

இதே காந்தி ஜெயந்திக்கு டாக்டர் நம்பள்கி எனும் பதிவர் எழுதிய பதிவு...




இப்படிப்பட்டதொரு கருத்தை எழுதுவதற்கும், அதை ஆதரிப்பதற்கும் இங்கே எத்தனை பேருக்கு துணிவிருக்கக்கூடும்?...

காந்தியை சுட்டுக்கொன்றதாலேயே பைத்தியம், தேசத்துரோகி என்றெல்லாம் பட்டமளிக்கப்பட்ட கோட்சேவின் உண்மை முகத்தை அறிய அவரின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வது மிக மிக முக்கியமானதாகும்.

கோட்சே – பிறந்ததும், வளர்ந்ததும்...
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் பிராமணர் வகுப்பைச்சேர்ந்த வினாயக் வாமன்ராவ் கோட்சே மற்றும் லட்சுமி ஆகியோருக்கு மகனாய்ப்பிறந்தவர்தான் கோட்சே எனப்படும் நாதுராம் வினாயக்ராவ் கோட்சே. ஆரம்பத்தில் அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ‘’ராமச்சந்திரா’’ என்பதுதான்.

கோட்சே பிறப்பதற்கு முன்பே அவருக்கு முன் பிறந்த மூன்று ஆண் குழந்தைகள் குழந்தைப்பருவத்திலேயே இறந்துபோக, பயந்துபோன கோட்சேவின் பெற்றோர், இது அவர்கள் குடும்பத்தின் ஆண்குழந்தைகள் மீதான ஏதோவொரு சாபம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கோட்சேவை பெண்குழந்தை போல அலங்கரித்தும், ஆடை அணிவித்தும்தான் வளர்த்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தின் பெண் குழந்தைகளுக்கு மூக்கு குத்தி வளையம் அணிவிக்கும் பழக்கவழக்கத்தின்படி பெண்குழந்தைபோல வளர்க்கப்பட்ட கோட்சேவுக்கும் மூக்கு குத்தி வளையம் அணிவித்திருக்கிறார்கள். இதனடிப்படையில் அவருக்கு உருவான பெயர்தான் நாதுராம்... அதாவது ‘’Nathuram’’ என்றால் ‘’Ram with a nose ring’’ என்று அர்த்தமாம்...! கோட்சேவுக்கு தம்பி பிறந்த பிறகுதான் அவருடைய பெற்றோர்கள் பயம் நீங்கி கோட்சேவை ஆண்குழந்தையாக வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஐந்தாம் வகுப்பு வரையிலும் லோக்கல் பள்ளிக்கூடத்தில் பயின்ற கோட்சே, அதன் பின்னர் புனேவிலிருக்கும் தனது உறவினரின் வீட்டில் தங்க நேர்ந்ததால் ஆங்கில வழிக்கல்வி பயின்றிருக்கிறார். தனது பள்ளிப்பருவத்தில் காந்தியின் மீது அளப்பரிய பற்றும், மரியாதையும் வைத்திருந்தவர்தான் இந்த கோட்சே.

பள்ளி படிப்பிலிருந்து வெளிவந்த கோட்சே, தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டது ‘’இந்து தேசிய இயக்கம்’’ மற்றும் ‘’ஆர்.எஸ்.எஸ்’’. இந்த இரு இயக்கங்களும் அப்போதைய காலகட்டத்தில் தீவிரமாய் எதிர்த்து வந்தது ‘’ஆல் இந்தியா முஸ்லீம் லீக்’’கின் பிரிவினைவாத கொள்கையைத்தான். (இதில் அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உறுப்பினராய் இருந்தவர் என்பது மட்டும் இன்றளவும் அந்த இயக்கத்தால் மறுக்கப்பட்டிருக்கிறது...)


கோட்சே ஹிந்து மகாசபாவுக்காக அக்ராணி என்ற பெயரில் மராத்திய செய்தித்தாள் ஒன்றை ஆரம்பித்து நடத்தியிருக்கிறார். இந்த செய்தித்தாள்தான் பிற்காலத்தில் ஹிந்து ராஷ்ட்டிரா என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. ஹிந்து மகாசபா ஆரம்பத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களுக்கு ஆதரவானதாகத்தான் இருந்திருக்கிறது.

ஆனால் போகப்போக கோட்சேவின் மனநிலையில் காந்தி மீதான எதிர்ப்பு உண்டாகியிருக்கிறது. காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவான செயல்களை ஆதரித்து, தேசத்துக்கு விரோதமானவராக கோட்சேவின் சிந்தனையில் பட்டிருக்கிறார். அது சரியா தவறா என்பது கோட்சேவின் கடைசி வாக்குமூலத்தை படிக்கும்போது உங்களுக்கும் புரியலாம்...

 ஜனவரி 30, 1948ம் ஆண்டு... மாலை ஐந்தேகால் மணி... மாலைநேர பிரார்த்தனைக்காக சென்றுகொண்டிருந்த காந்தியின் முன்னால் வழிமறித்து நின்றான் நாதுராம் விநாயக்ராவ் கோட்சே...


அதைக்கண்ட ஒரு பெண் கோட்சேயிடம் “Brother, Babu is already late...” என்றுகூறி கோட்சேவை அப்புறப்படுத்தி காந்திக்கு வழி ஏற்படுத்த முயன்றிருக்கிறார். அந்தப்பெண்ணை தள்ளிய கோட்சே, பெரெட்டா எம் 1934 எனும் செமி ஆட்டோமேடிக் பிஸ்டல் மூலம் காந்தியின் மார்பில் மூன்று முறை சுட்டிருக்கிறான். காந்தியின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்திருக்கிறது. காந்தியை சுட்டபின் கோட்சே அங்கிருந்து ஓடவோ, தப்பிக்கவோ முயற்சிக்கவில்லை.

சுடப்பட்டு இறந்த காந்தியின் உடல்...

மகாத்மாவின் இறுதி ஊர்வலம்...

எரியூட்டப்படும் மகாத்மா...

மகாத்மாவின் அஸ்தி...

தொடர்ந்து நடந்த வழக்கில் நவம்பர் 8, 1949ம் ஆண்டு கோட்சேவுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு, ஒரு வாரத்திற்குள்ளாகவே, அதாவது 1949ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி கோட்சேவும், குற்றத்துக்கு உடந்தையாய் இருந்ததாக நாராயண் அப்த்தே என்பவரும் தூக்கிலிடப்பட்டார்கள். இதில் காந்தியின் இரு மகன்கள் கோட்சேவை தூக்கிலிடுவது மகாத்மாவின் அஹிம்சை கொள்கைக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்க செய்தி...

கோட்சேவின் கடைசி வாக்குமூலத்தை படிக்கும் முன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்னும் சில செய்திகள்...

காந்தி சுடப்பட்டவுடன், கோட்சேவை அடிக்கப்பாய்ந்த கூட்டத்தினரிடம் சாகும் தருவாயிலும் ‘’அவனை ஒன்றும் செய்யாதீர்கள்... விட்டுவிடுங்கள்...’’ என்று சொன்னதாய் பரவிக்கிடக்கும் பழைய செய்தி முற்றிலும் பொய்.

காந்தி சுடப்பட்டு இறந்தபோது ‘’ஹே ராம்’’... என்று கடைசியாய் சொன்னதாக கூறப்படுவதும் பொய் என்றும், அது காந்தியை புனிதமானவராக, தெய்வீகமானவராக செய்தி பரப்ப அரசாங்கம் உருவாக்கிய கதையே என்றும் கோட்சேவின் சகோதரர் மறுத்திருக்கிறார். டைம் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில் கோட்சேவின் சகோதரர் தெரிவித்திருந்தது இதுதான்... ‘’சிலர் என்னிடம் காந்தி சுடப்பட்டபோது ஹே ராம் என்று கூறினாரா என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் அது கிங்ஸ்லி(காந்தியாக நடித்தவர்) கூறியது. காந்தி கூறியது இல்லை. ஏனென்றால் காந்தி சுடப்பட்ட சம்பவம் நாடகமில்லை...என்று கூறினேன்’’...

கோட்சேயின் வரலாற்றை எழுதிய சில புத்தகங்கள் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருக்கின்றன... அவை...
·         Gandhi Vadh aur Main (Gandhi Hatya Aani Me), by Gopal Godse (1967)
·         May it Please your Honor!, published by Surya Bharti, India, (2003) - the play based upon the book was banned
·         Why I assassinated Mahatma Gandhi, published by Surya Bharti (1993)
·         Nine Hours to Rama, Stanley A. Wolpert (1962)

கோட்சேவின் வழக்கில் நீதிபதியாக இருந்தவர்களில் ஒருவர் பின்னாளில் எழுதியிருந்த ஒரு புத்தகத்தில் ‘’கோட்சேவின் கடைசி வாக்குமூலத்தை கேட்டபிறகு, அங்கு கூடியிருந்த கூட்டத்தை நீதி வழங்குமாறு பணித்திருந்தால் அவர்கள் நிச்சயம் கோட்சேவை நிரபராதி என்றே நீதி வழங்கியிருப்பார்கள்...’’ என்றிருக்கிறார்.

நவம்பர் 8, 1948ம் வருடம்... நாதுராம் கோட்சே தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைத்த நாள். நீதி மன்றத்தில் பதற்றமில்லாமல் தான் ஏன் காந்தியைக்கொன்றேன் என்பதை விவரித்திருக்கிறார். தொண்ணூறு பக்கங்கள் அடங்கிய அவருடைய கருத்தை ஐந்து மணி நேரம் நின்று கொண்டே படித்திருக்கிறார். அந்தக்கடைசி வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததன் சுருக்கம் காந்தியை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் அனைவரும் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கிய விஷயமாகவே தோன்றுகிறது...
கோட்சே நீதிமன்ற விசாரணையின்போது...

கோட்சே மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணையின் போது...

கோட்சேவின் கடைசி வாக்குமூலம்...

"தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை. தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன்.

சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன். இந்தியாவின் வரலாற்றைப் படித்திருக்கிறேன். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் வரலாறுகளையும் படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி எழுதிய நூல்களையும், வீரசவர்க்கார் எழுதிய நூல்களையும் ஆழமாகப் படித்திருக்கிறேன். அவர்கள் பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். என்னுடைய எண்ணமும், செயலும் இயங்க அவை எனக்கு உறுதுணையாக இருந்தன. இவைகளைப் படித்ததால் இந்து மதத்தில் நம்பிக்கையும், அழுத்தமான பிடிப்பும் ஏற்பட்டன. இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் தொண்டு செய்வதே முதல் கடமை என்று எண்ணினேன். முப்பது கோடி இந்துக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்கு இந்துக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்வு ஏற்பட்டது.

1946ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை மகாத்மா காந்தி ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் "குர்ஆன்" வாசகங்களைப் படிக்கச் செய்தார். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை மகாத்மா காந்தியால் படிக்க முடியுமா?

1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது. மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர். 11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் மகாத்மா காந்தி, "முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது. காந்தியடிகளை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை. பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, மகாத்மா காந்தி அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை; அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும், அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.

நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம். "சத்தியாக்கிரகம்" என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். காந்திஜியே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர். அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும்; அல்லது அவர்களது அறிவுடைமயைக் காந்தியடிகளின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு சரண் அடைய வேண்டும்; பிறகு அவர் விரும்பியபடி செயல்புரிய விடவேண்டும். அவர் கண்டதோ, தோல்வி மேல் தோல்வி; அழிவு மேல் அழிவு. 33 வருடம் அரசியல் வாழ்வில் அவருடைய அரசியல் வெற்றி என்று எதையும் கூறமுடியாது. காந்தி வழி நடந்தால் நாம் அழிவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். கைராட்டை, அகிம்சை, உண்மை எனக் கூறிக்கொண்டு புரட்சிகரமான கருத்துக்கும் எதிராக இருப்பார். 34 வருடம் கழிந்த பிறகு கை ராட்டையைத்தான் அவர் தந்தார்.


ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார் தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது. காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும்.

மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை. பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30-1-1948ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை. சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது. 15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடுமாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.

"தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர்.

பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன். 1948 ஜனவரி 17ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன்.

படத்திலிருப்பது நாதுராம் கோட்சே மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள்...
நின்று கொண்டிருப்பவர்கள்- இடமிருந்து வலம்- சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே(கோட்சேவின் தம்பி), மதன்லால் பாவா, திகாம்பர் பட்கே(அப்ரூவர்)... 
அமர்ந்திருப்பவர்கள்- இடமிருந்து வலம்- நாராயண் அப்தே, விநாயக் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணு கர்காரே... 

இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."

இதுதான் கோட்சேவின் கடைசி வாக்குமூலமும், காந்தியின் மரணத்தின் மீதான குற்றவாளித்தரப்பின் மற்றொரு பரிமாணமும்.

கோட்சேவின் வாக்குமூலத்தில் இருக்கும் ஒவ்வொரு கருத்துக்களும் அவர் பைத்தியமோ, சைக்கோவோ இல்லை என்பதற்கும், அவர் பிறரால் மூளைச்சலவை செய்யப்பட்டு காந்தியைக்கொன்றவரில்லை என்பதற்கும்... அவரின் கடைசி வாக்குமூலத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுமே சாட்சி என்பது நானறிந்த விஷயம்...

மற்றபடி இது தேவையற்ற வரலாறு என்று நினைப்பவர்களுக்கு இது தேவையற்றதுதான்...

"Godse" என்ற பெயரின் ஆங்கில எழுத்துக்களுக்குள் "God" என்று கடவுளும் ஒளிந்திருப்பது ஆச்சரியம்தான்...!!!



நன்றி – நான் தகவல்களை அலசிய பல்வேறு இணையதளங்களுக்கும் மற்றும் கோட்சேவின் வாக்குமூலத்தை சுருக்கமாய் எழுதிய ஆசிரியர்களுக்கும்...

4 comments:

  1. Motha pasangalum mutta pasanga, Arivilinga, vakkiramum verithanamum kondavanunga, Avvalavuthan.

    ReplyDelete
  2. ithai nan yetrukolkiren nam innum yar yethai seithalum thatti ketka thunivu illamal iruka antha alla ganthi seitha kariyam than adithalum thirupi adikathey yenra murai intha kalathilum apadiye naka vendi irukirathu ithuku naam poradi suthanthiram petruirunthal sariya irunthu irukum

    ReplyDelete
  3. ithai nan yetrukolkiren nam innum yar yethai seithalum thatti ketka thunivu illamal iruka antha alla ganthi seitha kariyam than adithalum thirupi adikathey yenra murai intha kalathilum apadiye naka vendi irukirathu ithuku naam poradi suthanthiram petruirunthal sariya irunthu irukum

    ReplyDelete