Powered By Blogger

Sunday, June 18, 2017

உலகை உலுக்கிய புகைப்படங்கள்

முகம் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சோகத்தையும் தாண்டிய அப்பழுக்கற்ற, வீரம் செறிந்த பார்வையுடன் இருக்கும் சே குவேராவின் (Che Guevara) இந்தப் படம் புரட்சியின் குறியீடு. இந்துக்களுக்கு எப்படி சூலாயுதம் அடையாளமாக மாறிப்போனதோ, கிறிஸ்தவர்களுக்கு எப்படி சிலுவை அடையாளமாக மாறிப்போனதோ, அப்படி புரட்சியாளர்களுக்கான அடையாளமாக ’சே’வின் இந்தப் புகைப்படம் மாறிவிட்டது. உலக வரலாற்றிலேயே ஓவியம், சிற்பம், டாட்டூ, எம்ப்ராய்டரி என அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட புகைப்படம், ’சே’வின் இந்தப் புகைப்படம்தான். மேலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் (Fidel Castro) தாய்நாடா...? மரணமா...? என்ற வாக்கியம் அச்சு அசலாய் பொருந்திப் போவதும் ஆல்பர்டோ கொர்தாவினால் (Alberto Korda) எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்திற்குத்தான்.
 

ஜூலை 26, 1953-ல் ஆரம்பித்த கியூபா புரட்சி  ஜனவரி 1, 1959-ல் முடிந்தது. புரட்சி முடிவில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஃபிடல் காஸ்ட்ரோ, தனது இராணுவத்தை பலப்படுத்தும் வேளையின் முதல் கட்டமாக அதற்குத் தேவையான இராணுவத் தளவாடங்களை பெல்ஜியத்திலிருந்து (Belgium) வாங்கினார். அப்படி வாங்கப்பட்ட துப்பாக்கிகள், வெடி மருந்துகள் உள்ளிட்ட எழுபத்தி ஆறு டன் எடை கொண்ட ஆயுதங்களுடன் லா க்ப்ரே (La Coubre) என்ற பிரெஞ்சுக் கப்பல் கிளம்பியது. அந்தக் கப்பல் மார்ச் 4, 1960 அன்று கியூபாவின் (Cuba) ஹாவனா (Havana) துறைமுகத்திற்கு வந்தது. ஆயுதங்களை அந்தக் கப்பலிலிருந்து இறக்கிக் கொண்டிருந்த போது அதி பயங்கர சத்தத்துடன் வெடித்த குண்டு ஒன்று பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் உடல்களை சிதறச் செய்தது. அப்போது அசம்பாவிதம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த 'சே' உடனே அங்கு ஓடி வந்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்று யூகிப்பதற்குள் சரியாக 48 நிமிடத்தில் மீண்டும் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் மாலுமிகள், அவசர காலப் பணியாளர்கள் என சுமார் நூறு பேர் பலியானார்கள். இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். புரட்சியின் மூலம் வெற்றியைப் பறித்த காஸ்ட்ரோ தலைமையிலான கியூபாவின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல். அமெரிக்க உளவுப் படையான சிஐஏவின் (Central Intelligence Agency-America) நயவஞ்சகத் தாக்குதல் அது. கியூபாவிற்கு இராணுவத் தளவாடங்களைக் கொடுக்கக் கூடாது என்று அரசியல் ரீதியான பல அழுத்தங்களை பெல்ஜியத்திற்கு கொடுத்துப் பார்த்தது அமெரிக்கா. ஆனால், உலகத்தின் எந்த மூலையில் கம்யூனிசம் இருந்தாலும் அதை அழிக்க நினைக்கும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பெல்ஜியம் கட்டுப்படாததால், அவை கியூபாவிற்கு அனுப்பிய ஆயுதங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தது சிஐஏ. இந்த சம்பவம் நடந்து ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தக் குற்றச்சாட்டை எதிர்க்கவும் இல்லை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மேலும் அது தொடர்பான எந்த ஆவணங்களையும் மக்கள் மத்தியில் சமர்ப்பிக்காமல் கள்ள மௌனத்தை மட்டுமே அளித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் இறுதிச் சடங்கில் பங்கெடுப்பதற்காக மார்ச் 5, 1960 அன்று ஃபிடல் காஸ்ட்ரோ தனது உயர்மட்டக் குழுவினருடனும், 'சே' உள்ளிட்ட தோழர்களுடனும் அங்கே வந்தார். அப்போது அங்கே ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிக மேடையில் ஏறிய காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு எதிராகவும், கம்யூனிசத்திற்கு ஆதரவாகவும் எழுச்சி உரையை நிகழ்த்தினார். இந்த மேடையில்தான் தாய்நாடா...? மரணமா...? (The Motherland or Death) என்ற வார்த்தையை உலகத்தை நோக்கி முழங்கினார் காஸ்ட்ரோ. அப்போது இந்த நிகழ்வுகளை  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும் புகைப்படக் கலைஞருமான ஆல்பர்டோ கொர்தாவினால் (Alberto Korda). அப்போது காஸ்ட்ரோவிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த 'சே' சற்று நகர்ந்து வர, சுமார் முப்பது அடி தூரத்திலிருந்து தனது லைக்கா எம் 2 கேமராவினால் (Leica M2 with a 90 mm lens, loaded with Kodak Plus-X pan film) இரண்டே இரண்டு படங்கள் மட்டும் எடுக்கிறார் கொர்தா. இரண்டு விநாடிகள்தான் அதன் பிறகு 'சே' அங்கிருந்து விலகிவிட்டார்.

புகைப்படக் கலைஞர் கொர்தா அந்த தருணத்தை "அப்போது அந்தப் புகைப்படத்தை எடுக்கும்போதே எனக்குக் கண்டிப்பாகத் தெரிந்தது இது ஒரு வரலாற்றுப் புகழ் பெற்றதாக மாறும் என்று. காரணம் எனது கேமரா வியூ ஃபைண்டரில் பார்க்கும்போதே ’சே’வின் சக்தி மிகுந்த பார்வையும் அதிலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் என்னை அப்போதே உலுக்கிவிட்டது’’ என பதிவு செய்திருக்கிறார். இந்த நிகழ்வின் போது எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் தான் அப்போது வேலை செய்த புரட்சி (Revolución) என்ற பத்திரிகை நிறுவனத்திற்குக் கொடுத்தார் கொர்தா. ஆனால் அவ்வளவு ஈர்ப்பு இல்லை என்று சொல்லி 'சே'வின் இந்தப் புகைப்படத்தை நிராகரித்து விட்டார் அதன் ஆசிரியர். ஆனால் கொர்தாவோ அந்தப் புகைப்படத்தை தனது வீட்டில் மாட்டி வைத்ததோடு அதிகமாக பிரிண்ட் செய்து நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தார்.

ஆல்பர்டோ கொர்தா (Alberto Korda) மார்க்சிஸ்ட் சிந்தனையுடன் இருந்த கியூபாவின் புரட்சி புகைப்படக் கலைஞன். கியூபாவின் வெற்றிக்குப் பிறகு காஸ்ட்ரோ உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவரை நிழலாகத் தொடர்ந்து தனது கேமராவில் பதிவு செய்தவர் இவர். அந்த அளவுக்கு காஸ்ட்ரோவிற்கு நண்பனாக, ஆலோசகராக, ஆஸ்தான புகைப்படக் கலைஞராகவும் இருந்தவர். கேமராவின் மூலம் இவர் பார்க்கும் கோணம் முற்றிலும் அனைவரது பார்வையில் இருந்தும் வேறு பட்டதாக இருக்கும். அந்த காரணத்தினாலேயே காஸ்ட்ரோவிற்கு கொர்தாவை மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் திருமண புகைப்படக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய இவர், அதற்காக ஒரு ஸ்டூடியோவையும் வைத்திருந்தார். அப்போதுதான் அழகான பெண்கள் புகைப்படம் எடுக்க வருவார்கள் என்று அதற்கான காரணத்தையும் தமாஷாக ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். பிளாஷ் உள்ளிட்ட செயற்கை ஒளிக்கருவிகள் தவிர்த்து இயற்கை ஒளியைக் கொண்டு படம் எடுப்பது இவரது பழக்கம். இப்படி இருந்த தன்னை, தலையில் விறகுடனும் கையில் விளையாடும் பொம்மையுடனும் ஒரு குழந்தை நடந்து சென்ற காட்சிதான் இந்த சமூகத்தின் மீது வெறுப்பை உண்டாக்கி காஸ்ட்ரோவுடன் சேர வைத்தது என்கிறார்.

உலகம் முழுவதிலும் இவரது இந்தப் புகைப்படம் பயன்படுத்தப்பட்டாலும் அதற்காக இன்றுவரை ஒரு ரூபாய்கூட இவர் வாங்கியது இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்பு 2000-ல் ஸ்மிர்னோஃப் (Smirnoff) என்ற சாராயக் கம்பெனி தனது பாட்டிலில் இளைஞர்களைக் கவர்வதற்காக இந்தப் புகைப்படத்தை பிரிண்ட் செய்து விற்றது. அப்போது அதனை கடுமையாக எதிர்த்த கொர்தா அந்த நிறுவனத்தின் மீது வழக்கையும் தொடர்ந்தார். அதன்பிறகு தனது செயலுக்கு மன்னிப்பு கோரியது அந்த நிறுவனம். மேலும் நீதிமன்றத்திற்கு வெளியே கொர்தாவிற்கு 50,000 அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாகக் கொடுத்ததுடன் ’சே’வின் படத்தை பாட்டிலில் பிரிண்ட் செய்வதையும் நிறுத்திக் கொண்டு சமரச தீர்வைக் கண்டது. அந்தப் பணத்தை அப்படியே கியூபா மருத்துவக் கழகத்திற்கு (Cuban healthcare system) அளித்ததோடு, 'சே' உயிருடன் இருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்று அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் கொர்தா. அதேபோல லண்டனில் 1999-ல்  இந்தப் புகைப்படத்திற்கு சே ஜீசஸ் (Che Jesus) என்று பெயர் வைத்து இளஞர்களை அதிகப்படியாக தங்கள் மதத்திற்குள் கொண்டு வரவும் பயன்படுத்தின கிறிஸ்தவ சபைகள்.

ஒருமுறை லண்டனைச் சேர்ந்த ஜியாங்ஜியாகோமோ ஃபெல்டிரிநெல்லி (Giangiacomo Feltrinelli) என்பவர் கியூபா இராணுவத்தின் அனுமதியுடன் ‘சே’வின் புகைப்படங்களுக்காக கொர்தாவின் வீட்டுக்கு செல்ல, கொர்தாவும் பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் இரு படங்களை பிரிண்ட் செய்து அவரிடம் கொடுத்து அனுப்பினார். இதன் பின்னர் ஆகஸ்ட் 1967-ல் பாரிஸ் மேட்ச் (Paris Match magazine) என்ற பிரெஞ்சுப் பத்திரிகையில் Les Guerrilleros என்ற தலைப்பில் இந்தப் புகைப்படம் முதன் முதலில் வெளிவந்தது. பின் அதே வருடம் அக்டோபர் 9ஆம் தேதி 'சே' சுட்டுக் கொல்லப்பட, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜியாங்ஜியாகோமோ ஃபெல்டிரிநெல்லி (Giangiacomo Feltrinelli) இந்தப் புகைப்படத்தை லட்சக்கணக்கில் பிரிண்ட் செய்து இலவசமாக விநியோகித்தார். ’சே’வைக் அழித்த அமெரிக்காவால் அந்நாட்டின் டீ கோப்பைகளிலும், டீ ஷர்ட்டுகளில் இடம்பெரும் அவரது புகைப்படத்தை அழிக்க முடியவில்லை. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாகி விட்ட ’சே‘வை அனைத்து நிறுவனங்களும் வியாபாரமாக்குகின்றன. ஆனால் புரட்சி விதையாக மன்னுக்குள் போன  ’சே‘ வணிகமயமாக்குவதை விட அவரையும் அவரது கருத்துக்களையும் உலகமயமாக்குவதே தற்போதைய உடனடி தேவை.

No comments:

Post a Comment