Powered By Blogger

Saturday, August 20, 2016

ராஜீவ் படுகொலை: பதற வைக்கும் 10 மர்மங்கள்

ராஜீவ் கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மற்றும் தடயவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் வலியுறுத்தினர்.

ராஜீவ் காந்தி படுகொலையின் மர்மங்கள் குறித்து 'பைபாஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர் மருத்துவர்கள் ரமேஷ் மற்றும் புகழேந்தி ஆகியோர்.

ஆவணப்படம் பற்றி நம்மிடம் பேசிய கொளத்தூர் மணி, " பல புதிய ஆதாரங்களையும் புதிய செய்திகளையும் உலகுக்குச் சொல்கிறது இந்த ஆவணப்படம். இதுவரையில் ராஜீவ்காந்தி படுகொலையின் மர்மம் குறித்து வெளியான செய்திகளைவிட, இது முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. புலனாய்வு அதிகாரிகளின் விசாரணை குளறுபடிகள், ஏன் அவ்வாறு செய்தார்கள்? போலீஸாரின் கடுமையான, மிக மோசமான தவறுகள் என அனைத்தையும், விசாரணையின் ஆவணங்களில் இருந்தே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
ஒரு கொலை வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், குற்றவாளி என்று சொல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய முடியும். ஆவணப்படத்தில் காட்டப்படும் ஆதாரங்களைக் கொண்டே, இந்திய நீதித்துறையின் மரபை உடைக்கும் வகையில், புதிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் அதற்காகப் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரையும் சட்டப்பிரிவு 72 மற்றும் 161 வது பிரிவுகளின்படி விடுதலை செய்ய வேண்டும். 'பைபாஸ்' ஆவணப்படம் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் மிக முக்கியமான ஆவணம்" என்கிறார்.

ஆவணப்படம் சொல்லும் ஆதாரங்களை மறுத்துப் பேசிய சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமனும், தடயவியல் துறை பேராசிரியர் சந்திரசேகரும், " சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது ஹரிபாபுவின் உடல்தான். சிறுவயதில் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்திருந்தார். அவரது பெற்றோர்தான் உடலை அடையாளம் காட்டினார்கள். சம்பவ இடத்தில் ஹரிபாபு சடலமாக இருக்கும் படம் விகடனிலும் வெளியாகி இருந்தது"  என்கின்றனர்.

ஆனால், ஆவணப்படம் எழுப்பும் சந்தேகங்கள் அதிர வைக்கின்றன.

1. மே மாதம் 21-ம் தேதி இரவு 10.20 மணிக்கு, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நடந்தது. இரவு 10.35 மணிக்கெல்லாம், ' ராஜீவ்காந்தி இறந்துவிட்டார்' என்பதை உறுதி செய்துவிட்டார்கள். 22-ம் தேதி மதியம் 3 மணிக்கு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், ஒரு சடலத்திற்கு போஸ்ட்மார்ட்டம் நடத்தப்பட்டது. அந்த நிமிடம் வரையில் அந்த உடலுக்கு யாருமே உரிமை கொண்டாட வரவில்லை. 23- ம் தேதிதான் அது ஹரிபாபுவின் உடல் என அவரது தந்தை சுந்தரமணி உரிமை கொண்டாடினார். ஒருநாள் முழுவதும் அவர்கள் வராமல் இருந்தது ஏன்?

2. ஹரிபாபு என்று இவர்கள் சொல்லும் உடலில், 'முகம் முழுவதும் எரிந்து போய்விட்டது. அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போய்விட்டது' என்கிறார்கள். பிறகு எப்படி ஹரிபாபுதான் என உறுதியாக நம்பினார்கள்?

3. படுகொலை நிகழ்ந்த இடத்தில், ஹரிபாபு விழுந்து கிடக்கும் படம் விகடனில் வெளியானது. அந்தப் படத்தில் அவரது முகம் தெளிவாக இருக்கிறது. ஆனால், போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில், ' முகம் முற்றிலும் சிதைந்துபோய்விட்டது. அடையாளம் காணமுடியவில்லை' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை புலனாய்வு அதிகாரிகள் படித்துப் பார்க்கவில்லையா? மயக்க நிலையில் இருந்த அவருக்கு, சிகிச்சை அளித்து தப்ப வைத்துவிட்டு, முற்றிலும் சிதைந்த போன ஒரு முகத்தைக் காட்டி, 'இது ஹரிபாபுவின் உடல்' என மற்றவர்களை நம்ப வைத்திருக்கிறது போலீஸ் என்கிறது ஆவணப்படக் குழு.

4. ஹரிபாபு எனக் காட்டப்பட்ட உடலில் இருந்து தனியாக தலையை துண்டித்து எடுக்க என்ன காரணம்? சூப்பர் இம்போஷிசன் முறையில் அடையாளம் காண முடியும் என்பதால்தான் தலை துண்டிக்கப்பட்டது என அதிகாரிகள் சொல்கிறார்கள். இதை ஏற்றுக் கொண்டாலும், ஹரிபாபுவுக்கு அப்போது 22 வயதுதான். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் 30 வயது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், இறந்து கிடந்தது யார்?

5. ஹரிபாபுவின் அப்பா சுந்தரமணியிடம், சடலத்தைக் காட்டியபோது தலையில்லாத முண்டமாகத்தான் உடல் இருந்துள்ளது. அந்த சடலத்தின் உடலில் ப்ளு கலர் பேன்ட் போடப்பட்டிருந்தது. இது ஒன்றுதான் ஹரிபாபு எனக் கண்டறியக் காரணம் என்கிறார்கள். ஆனால், வீட்டில் இருந்து கிளம்பிய போது, கிரீம் கலர் சட்டை அணிந்திருந்தார். சடலத்தில் பச்சை நிறக் கலர் சட்டை இருந்தது. இந்தக் கேள்வியை ஹரிபாபுவின் அக்கா பதிவு செய்திருக்கிறார். இந்தக் குளறுபடி ஏன்?

6. அந்த சடலத்திற்கு ஏற்கெனவே, சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது என்றால், உடலுக்கு உரிமை கோருபவர்களிடம், ' உங்கள் பையனுக்கு சுன்னத் செய்தீர்களா?' என்ற அடிப்படைக் கேள்வியை போலீஸார் கேட்டிருக்க வேண்டும். அப்படி எங்குமே கேட்கவில்லை. ஆவணத்தின் எந்தப் பக்கத்திலும் சிறுவயதில் ஹரிபாபுவுக்கு சுன்னத் செய்யப்பட்டிருந்தது எனவும் பதிவாகவில்லை. சாதாரண ஒரு சடலத்தையே பல கேள்விகளுக்குப் பிறகுதான் உரியவர்களிடம்  ஒப்படைப்பார்கள். ஹரிபாபு சடலம் என்பது மிகப் பெரிய படுகொலைக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான சாட்சி. இந்த விஷயத்தில் போலீஸார் வேண்டுமென்றே தவறு செய்தார்களா?

7. ஆவணப்படத்தில் இருக்கும் இன்னொரு முக்கிய ஆதாரம். ஹரிபாபுவின் பக்கத்திலேயே ஜெயபாலன் என்பவர் போட்டோ எடுப்பதற்காக நின்றிருக்கிறார். இவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் ட்ரூப்பில் புகைப்படக்காரராக இருந்தவர். ' ஹரிபாபுவின் தோள்பட்டையை சப்போர்ட்டாக வைத்துக் கொண்டு படம் எடுத்தேன். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. விழித்தபோது வீட்டில் இருந்தேன். என் ட்ரூப்பில் இருந்தவர்கள் என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் சிகிச்சை அளித்திருக்கிறார்கள்' என அவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இவர் முகத்திலும் காயம் ஏற்பட்டிருந்தது. அவருடைய கேமராவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவரோடு ஹரிபாபுவும் சம்பவ இடத்தில் மயக்க நிலையில்தான் இருந்திருக்கிறார் என்கிறது ஆவணப்படக் குழு. இது உண்மையா?

8. சடலத்தை ஹரிபாபுவின் பெற்றோரிடம் கொடுத்த போலீஸார், ' உடலை புதைக்கத்தான் வேண்டும். எரிக்கக் கூடாது' என உறுதியாகக் கூறியதாகவும், 'அதையும் மீறி அவர்கள் எரித்துவிட்டதாக' இவ்வழக்கு தொடர்பான போலீஸின் ஆவணம் சொல்கிறது. போலீஸார் அவ்வாறு உறுதிபடக் கூறிய பின்பும், சடலம் எரியூட்டப்பட்டது ஏன்? புதைத்திருந்தால், எலும்பு சோதனையில் உண்மை வெளியாகும் என போலீஸார் விழிப்போடு செயல்பட்டார்கள் என்கிறார்கள். ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ போட்டவர்கள் வலதுபக்கம் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். இதில் இறந்து போன ஒரு முஸ்லிம் இளைஞரை ஹரிபாபு என போலீஸ் நம்ப வைத்துவிட்டது என்கிறார்கள். இது உண்மையா?

9. படுகொலை சம்பவத்தை புலனாய்வு செய்த அதிகாரிகள் கார்பெட்டின் கீழ், பூ மாலையில் வெடிகுண்டு, பூக்கூடையில் பாம், கடைசியாக மனித வெடிகுண்டு என நான்கு தியரிகளை முன்வைத்தார்கள். இதில், பூ போடுவதற்கான வேலையைச் செய்த சுலைமான் சேட்டிடம், ' நாங்கள் சொல்வதுபடி கேட்காவிட்டால் பூக்கூடையில் பாம் எனக் கதைகட்டிவிடுவோம்' என போலீஸார் மிரட்டியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இறந்துபோன இஸ்லாமியரின் உடலை 'கிளைம்'  செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. அதையே ஹரிபாபுவின் உடலாக சித்தரித்து வெளியுலகை நம்ப வைத்துவிட்டார்கள். ஓரளவு சிதைந்திருந்த அந்த முகத்தை, போலீஸாரே முற்றிலும் சிதைத்திருக்கலாம் என்கிறது ஆவணப்படக் குழு.

10. ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷனில் இரண்டு வீடியோக்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீடியோக்களில், ராஜீவ்காந்திக்கு மாலை போடும் நேரத்தில் மட்டும் கோளாறு செய்திருக்கிறார்கள். அதாவது அந்தக் காட்சியை மட்டும் அழித்திருக்கிறார்கள். இதுபற்றி நீதிமன்றம் கேட்டபோது, ' நாங்கள் வைத்திருந்தோம். மழை வந்து பூஞ்சை படிந்ததால் அந்தப் பகுதி அழிந்துவிட்டது' என காரணம் சொல்லியிருக்கிறார்கள். இந்த வழக்கில் ஆதாரங்களை அழிப்பதில் கூடுதல் அக்கறை காட்டியிருக்கிறது புலனாய்வுத்துறை என்கிறார்கள் ஆவணப்படத்தை இயக்கிய மருத்துவர்கள்.

 இணைய உலகில் 'பைபாஸ்' படத்தை  பதிவேற்றுகிறார்கள் ஆவணப்படக் குழுவினர்.  1991-ம் ஆண்டு இதேநாள் இரவில்தான் மனித வெடிகுண்டுக்கு பலியானார் ராஜீவ்காந்தி.


குற்றம் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டபோதிலும் இன்னமும் அந்தச் சம்பவம் குறித்துவரும் தகவல்கள் அதற்கான சூடு குறையாமல் இருக்கின்றன. குற்றம், விசாரணை, தண்டனை, மேல் முறையீடு என ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் ராஜிவ் கொலை குறித்து ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள், விஷயங்கள் எழுப்பும் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.
‘ராஜீவ் காந்தி கொலை- ஓர் உள்வேலையா?’
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊடகவியலாளர் பெரோஸ் அகமது எழுதிய, ‘ராஜீவ் காந்தி கொலை- ஓர் உள்வேலையா?’ என்கிற புத்தகத்தில், ராஜிவ் காந்தி கொலையால் புலிகளுக்கு எந்த ஓர் ஆதாயமும் இல்லை. அது, ஓர் அரசியல் ஒப்பந்தக் கொலை. சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையில், ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தை ராஜிவ் காந்தி ஆட்சிக்கு வந்தால் அழித்துவிடுவார்’ என்பதற்காகவே கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது முற்றிலும் பொய். ராஜிவ் மரணத்தால் ஆதாயம் பெற்றிருக்கக் கூடியவராக இருப்பவர்களால்தான் இந்தக் கொலை நடந்திருக்கும் என்று தெரிவித்திருந்த கருத்து, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


'தான் கொல்லப்படுவோம்' என்பதை அறிந்திருந்த ராஜிவ்!
இந்தநிலையில், சமீபத்தில் வெளியாகி இருக்கும், ‘ராஜிவ் காந்தியின் படுகொலை’ புத்தகத்தை எழுதிய நீனா கோபால் என்கிற பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கும் கருத்துகள் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நாளான மே 21, 1991 அன்று, அவரைப் பேட்டி எடுப்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் மைதானம் வரை அவருடனே பயணித்தவர் நீனா. ‘தான் கொல்லப்படுவோம் என்பது ராஜிவ் காந்திக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது’ என்கிற விஷயத்தைத் தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறார் நீனா. அந்த மைதானத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததையும் அழுத்தமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவரது புத்தகத்தில், ''நாங்கள் மைதானத்தை நெருங்கும் சமயத்தில் என்னுடைய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்த ராஜிவ், ‘இதைக் கவனித்தீர்களா? ஒவ்வொரு முறையும் தெற்காசிய நாடுகளில் இருந்து ஒரு தலைவர் உருவாகும்போதோ அல்லது தனது மக்களுக்காகவோ, தனது நாட்டுக்காகவோ ஏதாவது ஒன்றைச் சாதிக்கும்போது அவர் தாக்கப்படவோ, கொல்லப்படவோ செய்கிறார். உதாரணமாக இந்திரா காந்தி, ஷேக் முஜிப், பூட்டோ, ஜியா உல் ஹக், பண்டாரநாயக என இந்த எண்ணிக்கை தொடர்கிறது. இதில், நானும் சில தீயசக்திகளின் இலக்காக இருக்கலாம்’ என்று சொல்லி இருக்கிறார். இதைச் சொன்ன சில மணி நேரங்களிலேயே அவர் கொல்லப்பட்டிருக்கிறார்'’ என்பதைப் பதிவுசெய்ததோடு மற்றொரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.
மாத்தையா - புலிகள் அமைப்பில் இருந்த இந்திய உளவாளி!

அது புலிகளின் அடுத்தகட்ட தலைவராக விளங்கிய மாத்தையா இந்திய உளவு அமைப்போடு தொடர்புடையவர் என்று சொல்லி, அவரை கைதுசெய்து தூக்கிலிட்டது விடுதலைப்புலிகள் அமைப்பு. அது உண்மை என்பதையும் விளக்கி இருக்கிறார் நீனா. ‘'விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த மாத்தையா 1987-ம் ஆண்டில் அதன் இணைத் தலைவராக உயர்ந்தார். பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இருந்த நேரத்தில் அவருக்கு, இந்திய உளவு அமைப்பான ராவோடு தொடர்பு ஏற்பட்டது. அதன்படி, விடுதலைப்புலிகள் பற்றிய ரகசியத் தகவல்களை அந்த அமைப்போடு பரிமாறிக்கொண்டார்.
விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பின்பு, அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரனை அழித்து, தக்க சமயத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே மாத்தையாவுக்கு, ரா அமைப்பு  கொடுத்திருந்த முக்கியமான பணி. அதற்கான எல்லா ஆதரவையும் செய்தது. இந்தச் சமயத்தில், அமிர்தலிங்கம், மகேஸ்வரன் ஆகியோர் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அப்போது மாத்தையா மீது பொட்டு அம்மானுக்கு சந்தேகம் வந்ததால் அவரது தகவல் பரிமாற்றம் அனைத்தும் ஒட்டுக் கேட்கப்பட்டது.
அதில் அவருக்கும், இந்திய உளவு அமைப்புக்குமான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. தான் இரண்டாம்கட்ட தலைவராக இருந்த காலத்தில் இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு அதிகார வட்டத்தில் இருப்பவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தபோது மாத்தையாவுக்குள் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதன்பின்பு மாத்தையா கைது செய்யப்பட்டு 19 மாதங்களுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, கொடூரமான அளவு துன்புறுத்தப்பட்டார். அதன் பின்னரே தூக்கிலிடப்பட்டார். அதோடு, மாத்தையாவின் ஆதரவாளர்களாக இருந்த 257 பேரையும் கொன்று குவித்ததோடு மட்டுமில்லாமல், குழிதோண்டி தீயிட்டுத் தங்களது வழக்கமான பாணியில் விடுதலைப்புலிகள் கொலை செய்தார்கள்’’ என்று புத்தகத்தில் தெரிவித்துள்ளார் நீனா.
 உளவு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம்!
இதில் பேசி இருக்கும் முன்னாள் உளவு அதிகாரி ஒருவர், '’1987 முதல் 1990 காலகட்டத்தில் இலங்கையில் இந்திய ராணுவம் முகாமிட்டிருந்த சமயத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தினுள் அவர்கள் ஊடுருவினார்கள். இது முழுக்க நமது தவறுதான். நாம் பிரபாகரனைத் தவறாக மதிப்பிட்டுவிட்டோம். இந்த விஷயம் இவ்வளவு தவறாகப் போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. பிரபாகரன் மனவோட்டத்தை அறிந்திருந்தால் நாம் ராஜிவ் காந்தி மரணத்தைத் தடுத்திருக்க முடியும்’' என்று தெரிவித்திருக்கிறார். இப்படிப் பல சர்ச்சைக் கருத்துகளைத் தாங்கி வெளிவந்திருக்கிறது அந்தப் புத்தகம். இன்னும் எத்தனை விஷயங்கள் இதில் இருக்கிறதோ தெரியவில்லை?!
யார் இந்த நீனா?
37 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வருபவர் நீனா கோபால். 1980-களில் ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிந்தவர். 1990-களில் ஏற்பட்ட முதல் வளைகுடா போரில் செய்தியாளராகப் பணியாற்றினார். போரினால் பாதிக்கப்பட்ட ஈராக் மற்றும் அதன் அண்டை நாடுகளில் இரண்டாம் வளைகுடா போரின்போது பணியாற்றினார். அதன்பின் இந்தியா வந்த அவர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை குறித்த செய்திகளைச் சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். தற்போது பெங்களூரூவில் 'டெக்கான் கிரானிக்கல்' பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.




thanx - Vikadan 


No comments:

Post a Comment