Powered By Blogger

Wednesday, August 3, 2016

‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்!

1. ஹிட்லரின் ஒலிம்பிக்ஸ்! 


முதல் உலகப் போர் நடக்கக் காரணம் யார்?... அதனால் உலகமே சீரழிந்து கிடக்கிறதே, அனைத்துக்கும் காரணம் யார்? அந்தக் கொடூரக் குற்றவாளி யார்?... முதல் உலகப் போருக்கு ‘நன்றி’ கார்டு போட்ட சமயத்தில், இந்தக் கேள்விகள் எழுந்தபோது இதற்கான ஒற்றை பதிலாக சகல திசைகளிலிருந்தும் ஆள்காட்டி விரல்கள் ‘ஜெர்மனி’யை நோக்கித்தான் நீண்டன. ஜெர்மனி, முதல் உலகப்போரில் சந்தித்த இழப்புகளைவிட, அடுத்த 10 ஆண்டுகளில் போர்க் குற்றவாளியாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு சந்தித்த பேரிழப்புகளே மிக அதிகம்.
'ப்ச்... என்னதான் இருந்தாலும் ஜெர்மனி பாவம். பொருளாதார ரீதியாக சோம்பிப் போய்க் கிடக்கிறது. அதைக் கொஞ்சம் உற்சாகப்படுத்துவோமே.' சர்வதேச நாடுகளுக்கு 1931ல் ஜெர்மனி மீது கருணை சுரந்தது. ஆகவே 1936 சர்வதேச கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளை ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடத்துவதற்கு ஓர் வாய்ப்பு கொடுத்தனர்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தினர் நடத்திய வாக்கெடுப்பில் பெர்லின் வென்றது.
ஆனால், 1933ல் ஜெர்மனியில் நாஜி கிரகணம் படர ஆரம்பித்து விட்டது. ஆல் இன் ஆல் ஆரிய வீரியர் அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மனியைத் தன் வசப்படுத்தியிருந்தார். அவரது அரசியல் காய் நகர்த்தல்கள் ஒவ்வொன்றும் சர்வதேச அளவில் அதிர்வுகளை, அதிர்ச்சிகளை உருவாக்கின. குறிப்பாக, யூத எதிர்ப்பு நடவடிக்கைகள்!

ஒலிம்பிக்கில் யூத விளையாட்டு வீரர்கள் யாரையும் ஹிட்லர் பங்குபெற அனுமதிக்கமாட்டார் என்ற கருத்து அழுத்தமாகப் பரவியது. ஏற்கெனவே ஜெர்மனியில் பல்வேறு விளையாட்டுக்களில் புகழ் பெற்றிருந்த வீரர்கள், தாங்கள் யூதர் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகக் குமுற ஆரம்பித்திருந்தனர். ஜிப்ஸி வீரர்களுக்கும் இதே நிலைமைதான்.
‘இப்படிப்பட்ட இனவெறி ஆட்சி நடக்கும் ஒரு நாட்டுக்கு யூத வீரர்களை அனுப்ப முடியாது. ஆகவே, ஒலிம்பிக் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும்’ என்று எதிர்ப்புக் குரல்கள் 1934ல் எழ ஆரம்பித்தன. சர்வதேச யூதர்களின் அழுத்தத்தால் அதை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆதரித்தன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினர் இடத்தை மாற்றிவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். பெர்லினுக்கான வாய்ப்பு கை நழுவிப் போகும் நிலை.

‘யூதக் கொசு ஒழிப்புத் திட்டத்துக்கே நேரம் போதவில்லை. இதில் பெர்லினுக்கு ஒலிம்பிக்ஸ் எல்லாம் அநாவசியமே!’ என்ற மனநிலையில்தான் ஹிட்லரும் இருந்தார். ஆனால், கொள்கைப் பரப்பு அமைச்சரான ஜோசப் கோயபெல்ஸ், ஹிட்லரிடம் கிசுகிசுத்தார். ‘ஐயன்மீர்! ஜெர்மனியின் மீதான களங்கங்களைத் துடைத்தெறிய, அதற்கு சர்வதேச அளவில் நன்மதிப்பு பெற்றுத்தர இந்த ஒலிம்பிக்ஸ் உதவும். அதைக் கொண்டு நாம் வருங்காலத்தில் பல விஷயங்களைச் சாதிக்கலாம். விஷமங்களை அரங்கேற்றலாம்.’ ஆகவே, ஹிட்லர் ‘நல்லவன்’ முகமூடியை எடுத்து அணிந்துகொண்டார். சர்க்கரைப் பொங்கல் வார்த்தைகள் பேச ஆரம்பித்தார்.
சர்வதேசப் பெரியோர்களே! தாய்மார்களே! தாங்கள் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறோம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எந்தவிதத் தடையுமில்லை. அவர்கள் தாராளமாக ஓடலாம், எம்பிக் குதிக்கலாம், மல்லாக்க நீந்தலாம், ஈட்டி எறியலாம், துப்பாக்கிக்கூட சுடலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். ஒலிம்பிக்கை மிகச் சிறந்த முறையில் நடத்திக் காட்ட பெர்லின் தயாராகிக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஜெர்மானியனும் இந்த ஒலிம்பிக்கை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அனைவரும் வருக! நல்ஆதரவு நல்குக!

சொன்னதோடு மட்டுமல்லாமல், ஹெலன் மேயர் என்ற யூதப் பெண்ணை ஜெர்மனி சார்பில் போட்டியிடும் வாள் சண்டை வீராங்கனையாகவும் அறிவித்தார். அதுவரை யோசித்து வந்த அமெரிக்கா, பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருப்பதாக அறிவித்தது. இதனால், யூத எதிர்ப்புக் குரல்கள் அமுங்கிப் போயின. பிற நாடுகளும் தங்கள் நாட்டின் சார்பில் யூத வீரர்களை அனுப்பத் தயாராகின.

ஒலிம்பிக்கை நல்லவிதமாக நடத்திக் காட்ட வேண்டிய முழுப்பொறுப்பும் கோயபெல்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. பெர்லினில் நடந்த ஒலிம்பிக்ஸ் போல் வேறெங்கும் கண்டதே இல்லை என அனைவரும் பிளந்த வாயை மூடாமல் ஊர் திரும்ப வேண்டுமென்றும் ஹிட்லர், கோயபெல்ஸுக்கு அன்புக் கட்டளை இட்டிருந்தார்.
கோயபெல்ஸ், பரபரவெனத் தயாரானார். அதுவரை ஜெர்மனியெங்கும் மிளிர்ந்து கொண்டிருந்த யூத எதிர்ப்புப் பிரசார சுவரொட்டிகள், அறிவிப்புகள், இன்னபிற அடையாளங்கள் எல்லாம் ஒரே இரவில் காணாமல் போயின. யூத எதிர்ப்பு விதிகள், சட்டங்கள் அனைத்தும் (தற்காலிகமாக) நீக்கப்பட்டன. செய்தித்தாள்கள் யூத எதிர்ப்புப் பிரசாரமின்றி இயல்பாக வெளிவந்தன. ஜெர்மன் ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக் குறித்த செய்திகளை, விளம்பரங்களை, தகவல்களை, வழிகாட்டிகளை ஜெர்மன், ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் அசத்தலாக அச்சிட்டு வழங்கியது.

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கும் வழக்கம் பண்டைய ஒலிம்பிக்ஸில் உண்டு. அது 1928 ஒலிம்பிக் போட்டிகளில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு மேலும் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமென கோயபெல்ஸ் யோசித்தார். ஜெர்மனியின் விளையாட்டுத் துறை செயலாளரான கார்ல் டயெம் ஒரு யோசனை சொன்னார். ‘ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸில் இருந்து ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வோம். பின் அதை ஜெர்மனிக்கு கொண்டு வந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றுவோம்.’

அந்த அருமையான யோசனை அழகாகச் செயல்படுத்தப்பட்டது. வெயில், சூறாவளி, பனி, மழை என எதிலும் அணைந்துவிடாத விசேஷமான ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஜெர்மானிய நிறுவனம் ஒன்று தயாரித்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாரத்தான் வீரர்கள், ஆளுக்கு ஒரு கிலோ மீட்டர் வீதம், கிரீஸின் ஒலிம்பியாவிலிருந்து, பெர்லினுக்கு ஒலிம்பிக் தீப்பந்தத்துடன் ஓடி வந்தார்கள். அது பெர்லின் ஒலிம்பிக்ஸுக்கு மிக நல்ல விளம்பரத்தையும் நன்மதிப்பையும் தேடிக் கொடுத்தது. அதிலிருந்து ஒலிம்பிக் தீப்பந்தம் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்யும் வழக்கம் ஆரம்பமானது.
'1932ல அமெரிக்காக்காரன் லாஸ் ஏஞ்சல்ஸுல ஒலிம்பிக்னு ஒண்ணு நடத்துனானே... அதெல்லாம் சப்பை. 1936ல தலைவர் ஹிட்லர் பெர்லின்ல ஒலிம்பிக் நடத்துனாரு பாரு... ஆயுசுக்கும் மறக்க முடியாது. ஆஹா ஓஹோன்னு அசத்திட்டாரு!' 

இதுவரை உலகில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் ஹிட்லர் நடத்திய பெர்லின் ஒலிம்பிக்போல் பிரமாண்டமான ஒன்றை யாம் வேறெங்கும் கண்டதில்லை பராபரமே! இப்படி சகல தேசத்தினரும் வியந்தே வீழ்ந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தார் கோயபெல்ஸ்.
ஒலிம்பிக் ஏற்பாடுகளுக்காகவே ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது. சர்வ வசதிகளுடனும் கூடிய, ஒரு லட்சம் பேர் அமரும் விதத்தில் ஒலிம்பிக் ஸ்டேடியம் அதிவேகமாகத் தயாரானது. 130 ஏக்கர் பரப்பளவில், ஜெர்மனியின் வரைபட வடிவில், சர்வதேச வீரர்களும் தங்கும் வகையிலான ஒலிம்பிக் கிராமம் இயற்கையான சூழலில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு நாட்டின் வீரர்களுக்கும் தனித்தனி குடியிருப்புகள்; எல்லா வசதிகளும் நிறைந்த 160 கான்கிரீட் வீடுகள்; அந்தந்த நாட்டின் மொழி பேசத் தெரிந்த உதவியாளர்கள்; அந்தக் குடியிருப்புகளில் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள்.  வீரர்களுக்கு அவர்களது சொந்த நாட்டின் உணவுக் கலாசாரத்துக்கேற்ற வகையில் உணவுகள் வழங்கப்பட்டன. தவிர, அவர்களது படுக்கை அறைகூட, அந்தந்த நாடுகளுக்கேற்ப அமைக்கப்பட்டன.
உடற்பயிற்சிக்கான வசதிகள், நீச்சல் குளங்கள், 400 மீ தடகளப் பாதை, வங்கி, அஞ்சலகம் போன்ற வசதிகளும் உண்டு. அனைத்து வீரர்களும் இந்தக் கவனிப்பில் திக்குமுக்காடிப் போனார்கள்.
ஒலிம்பிக்கைக் காண பெர்லினுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், ஜெர்மானியர்களின் பணிவான வரவேற்பை, அன்பான உபசரிப்பை, வியத்தகு விருந்தோம்பலைக் கண்டு நெக்குருகிப் போனார்கள். ‘ச்சே! ஹிட்லரைப் போய் தப்பா நெனைச்சுட்டோமே!’ என்று நொந்து கொண்டார்கள். பெர்லின் சாலைகளும் தெருக்களும் அவ்வளவு சுத்தமாக மின்னின. நகரமெங்கும் விதவிதமான சிலைகள், அலங்காரங்கள் அசத்தின. ஒலிம்பிக் சார்ந்த நிகழ்ச்சிகள், பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கண்களை நிறைத்தன.
அதுவரை அவர்கள் கேள்விப்பட்ட ‘இனவெறி சமாசாரங்கள்’ எதுவுமே எங்கும் தென்படவில்லை. ‘ஐ லவ் ஜெர்மனி!’ என்று சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வாயார ‘குட் சர்டிபிகேட்’ கொடுத்தார்கள். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், இதர ஊடகத்தினரும் நல்ல முறையில் கவனிக்கப்பட்டனர். மிதமிஞ்சிய மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆக, சர்வதேச அளவிலும் செய்திகள் ‘சிறப்பாகவே’ வெளிவந்தன.

‘தன் மேலுள்ள அத்தனைக் களங்கங்களையும் துடைத்தெறிய இந்த வாய்ப்பை ஜெர்மனி அருமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இன்றைய தேதியில் உலகிலேயே அமைதியாக, அழகாக வாழ்பவர்கள் பெர்லின் நகர மக்களே!’ - தி நியு யார்க்கர் இதழ் கொண்டாடியது. ‘தற்போது ஜெர்மானியர்கள் மிகச்சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று உலகிலிருக்கும் மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஹிட்லரும் ஒருவர்’ - நியு யார்க் டைம்ஸ் உச்சி மோந்தது. ஹிட்லருக்கு பரம திருப்தி. ஆகவே, கோயபெல்ஸுக்கு 100மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வாங்கிய திருப்தி.
1936, ஆகஸ்ட் 2; பதினோராவது ஒலிம்பிக் தொடக்க விழா; லட்சம் பேர் மைதானத்தில் நிரம்பி வழிந்தார்கள்; மூவாயிரம் பேர் சேர்ந்திசைப் பாடல் ஒன்றைப் பாட, மறைந்த ஜெர்மனியின் அதிபர் ‘ஹிண்டென்பெர்க்’ பெயரிடப்பட்ட மாபெரும் விமானம் ஒன்று, மைதானத்தை ஜெர்மனியின் கொடியுடன் கடந்து சென்றது. ஜெர்மானியர்கள் தேச பக்தி பொங்க மெய் சிலிர்த்தார்கள். ஹிட்லர், கையில் பூங்கொத்தை ஏந்தியபடி, ஒரு சிறுமியுடன் ‘அமைதியின் கடவுள்’ போல மைதானத்துக்குள் பிரசன்னமானார். அந்தப் பொழுதில் 360 டிகிரியிலும் நாஜி சல்யூட். ஹிட்லரைப் புகழ்ந்து ஓயாத கோஷங்கள். சர்வதேசப் பார்வையாளர்கள் பிரமித்துப் போனார்கள். ஜெர்மானியர்கள் ஹிட்லர் மேல் இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்களா! ஹிட்லர் இத்தனை வலிமையானவரா!

 20000 வெண்புறாக்கள் சிறகடித்துப் பறக்க, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பலத்த ஆரவாரத்துக்கிடையே ஹிட்லர், மைதானமே அதிரும் குரலில் உரையாற்றினார். ‘இப்போதும் சரி, எப்போதும் சரி, நான் அமைதியையே விரும்புகிறேன். நாம் அத்தகைய அமைதியான உலகில் என்றும் வாழ்வோம்!’ என்று அவர் பேசிய பேச்சுக்கு அமைதிக்கான நோபல் பரிசைத் தூக்கி விட்டெறிந்திருக்கலாம். மைதானத்தில் பறக்கவிடப்பட்ட பல்லாயிரம் புறாக்கள் அங்கேயே சுற்றி வந்தன.

தொடக்க விழாவின் ஒரு நிகழ்வாக பீரங்கிகள் முழங்க, புறாக்களுக்கு அடிவயிறு கலங்கிவிட்டது. ஹாயாக வாய் பிளந்து கண்டுகளித்த பார்வையாளர்கள் மேல் ஆய்! தலைகளும் தொப்பிகளும் நாசமாயின. சலசலப்பு; அருவருப்பு; கலகலப்பு.  அதில் ஏதேனும் ஒரு யூதப் புறா ஹிட்லரைத் தேடிப்பிடித்து அவர் மீது எச்சமிட்டதா என்பது குறித்த வரலாற்று புருடாக்கள் ஏதுமில்லை.

(பெர்லின் ஒலிம்பிக்ஸ் முதல் நாள் நிகழ்வுகள் : வீடியோ https://www.youtube.com/watch?v=_s_K3-FEwQA)
Leni Riefenstahl - நாஜிக்களுக்கான பிரசாரப் படங்கள் எடுத்துக் கொடுத்த ஜெர்மனியின் பெண் இயக்குநர். நடிகை, நடனப்பெண், புகைப்படக்காரர் என்று லெனிக்குப் பல முகங்கள் உண்டு. புதிய கருவிகளைக் கொண்டு, நவீன உத்திகளில், ஆச்சரியமான கோணங்களில் படமெடுக்கும் திறமை கொண்ட லெனியின் திறமை ஹிட்லருக்குப் பிடிக்கும். நாஜியின் அதிகாரபூர்வ ஃபிலிம் மேக்கரான லெனி, ஒலிம்பிக் நிகழ்வுகள் பலவற்றையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் படம் பிடித்தார். பெர்லின் நகருக்குள் இருபத்தைந்து இடங்களில் திரைகட்டி, ஒலிம்பிக் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முப்பத்து மூன்று கேமராமேன்கள், சுமார் பத்துலட்சம் அடி நீளமுள்ள காட்சிகளைப் பதிவு செய்தார்கள். பெர்லின் ஒலிம்பிக்ஸின் பிரமாண்டம் அதில் அச்சு அசலாகப் பதிவு செய்யப்பட்ட லெனியின் ஆவணப்படம், இரண்டு பாகங்களாக 1938 ஏப்ரலில் வெளியிடப்பட்டு, சர்வதேச அளவில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. காட்சிகள் சரியாகத் தெரியவில்லை, தெளிவில்லை என்று குறைகள் எழுந்தாலும், ஒலிம்பிக் வரலாற்றில் தொலைக்காட்சி உபயோகப்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை.

தொடக்க விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் அகர வரிசைப்படி அணிவகுத்து வந்தனர். இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் கொடியை ஏந்தி வந்தனர். பிரான்ஸ் வரும்போது, ஜெர்மானியர்களிடையே சலசலப்பு. பிரான்ஸ் வீரர்கள், எதிரித் தலைவரான ஹிட்லருக்கு சல்யூட் வைப்பார்களா என்று. அவர்கள் சல்யூட் வைத்தார்கள். ஜெர்மானியர்கள் ஆர்ப்பரித்தார்கள். ‘ஹிட்லருக்கு வைத்த சல்யூட் அல்ல, அது ஒலிம்பிக் சல்யூட்’ என்று பின்னர் பிரான்ஸ் சமாதானம் சொன்னது. இங்கிலாந்து வீரர்களும், அமெரிக்க வீரர்களும் ஹிட்லருக்கு கையால் சல்யூட் வைக்காமல், ராணுவ ஸ்டைலில் வலதுபக்கம் தலையைத் திருப்பி மரியாதை செய்து கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
உலகுக்குத் தன்னை உத்தமனாகக் காட்டிக் கொண்ட ஹிட்லர், ஒரு விஷயத்தில் விட்டுக் கொடுக்க வில்லை. ‘பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஜெர்மனியே அதிகப் பதக்கங்கள் வெல்ல வேண்டும். ஆரியர்களே வீரியமானவர்கள் என்று நிரூபித்தே தீர வேண்டும்’ என்ற ரகசியமாகக் கட்டளை இட்டிருந்தார்.

ஜெர்மானிய வீரர்களுக்கு ‘தேச வெறியை’ ஊட்டும் விதத்தில் பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன. நம் தேசத்துக்குப் பெருமை சேர்க்க நாம் இதில் வென்றே ஆக வேண்டுமெனக் களத்தில் ஆவேசமாகச் செயல்படக் கூர்தீட்டப்பட்டனர்.
1936 பெர்லின் ஒலிம்பிக்கின் இறுதியில் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்தாலும், ஒரு கருப்பரிடமும், ஓர் இந்தியரிடமும் ஹிட்லரின் ஆரிய வெறி படுதோல்வி அடைந்தது.


3. இருவர் ராஜ்ஜியம்!

வாசலுக்கே வந்து வெற்றிலை பாக்கு வைத்து ஹிட்லர் அழைத்தாலும் சரி, நாங்கள் பெர்லின் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கிறோம்’ என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தது சோவியத் ரஷ்யா. தவிர, பல நாடுகளில் உள்ள யூத விளையாட்டு வீரர்கள், பெர்லின் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார்கள். ஸ்பெயின் ஒருபடி மேலே சென்று, அதே சமயத்தில் பார்சிலோனாவில் போட்டி ஒலிம்பிக் ஒன்றை நடத்தத் திட்டமிட்டது. அதற்காகப் பல்வேறு ஏற்பாடுகளும் நடந்துவந்த நிலையில், ஸ்பெயினில் மக்கள் புரட்சி வெடித்ததால், போட்டி ஒலிம்பிக் புஸ்வானமாகிப் போனது.

19 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், 5 யூதர்கள் உள்பட 312 வீரர்களை அமெரிக்கா அனுப்பிவைத்தது. ‘நாங்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை மிகுந்த மதிப்புடன் நடத்துவோம்’ என்று புன்னகைத்தது ஜெர்மனி. அதிகபட்சமாக 348 வீரர்களை ஜெர்மனி களமிறக்கியிருந்தது. 1932 ஒலிம்பிக்ஸில் ஜெர்மனி மூன்று தங்கப்பதக்கங்கள் பெற்று ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், 1936 பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஜெர்மனி, 89 பதக்கங்களை அள்ளி முதலிடத்தைப் பிடித்தது. அதில் 33 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம்.

எப்போதும் உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா, 56 பதக்கங்களுடன் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டது. ஒரே ஒலிம்பிக்கில் ஒன்பதாம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு வருவதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். நாஜிக்கள் ஏமாற்றுகிறார்கள் என்று கிளம்பிய சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை.

அந்தச் சூழலில் சர்வதேச ரசிகர்களின் பார்வையும் (ஜெர்மானியர்கள் உள்பட) ஒரு வீரரின் மேல் குவிந்திருந்தது. அவர் அமெரிக்கத் தடகள வீரரான 23 வயது ஜெஸி ஓவன்ஸ். கருப்பினத்தைச் சேர்ந்தவர். வறுமையை தன் மனவலிமையால் வென்று மேலே வந்தவர். இருந்தாலும் சொந்த தேசத்திலேயே அவர் எதிர்கொண்ட இனவெறி இன்னல்கள் ஏராளம். அதையெல்லாம் மீறி, உலகம் உற்றுக் கவனிக்கும் அமெரிக்கத் தடகள வீரராக அசத்திக் கொண்டிருந்தார்.

1935ல் ஜெஸி, தன் முதுகுத் தண்டின் வால் எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தாலும், மிச்சிகெனில் நடந்த பிக் டென் சாம்பியன்ஷிப்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டார். கீழே குனிந்து தரையைத் தொட முடியாத வலியுடன் தடகளத்தில் ஓடினார். தடதட வேகத்தில், 100 மீட்டரில் உலக சாதனை நேரத்தைச் சமன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் நீளம் தாண்டி, புதிய உலக சாதனை படைத்தார். அதற்கடுத்த முப்பதே நிமிடங்களில் 220 யார்டு ஓட்டத்தில் மற்றுமொரு உலக சாதனையை வசப்படுத்தினார்.
தொடர்ந்து 220 யார்டு தடை தாண்டும் ஓட்டத்தில் முதலாவதாக வந்தார். ஆக, அடுத்தடுத்த சாதனைகளால் 1936 ஒலிம்பிக்ஸில் அமெரிக்காவுக்கு தங்கம் அள்ளித்தரப்போகும் அசகாய வீரராக ஜெஸி ஓவன்ஸ் பேசப்பட்டார். பெர்லினில் வந்திறங்கிய ஜெஸியை சர்வதேச இளம் ரசிகைகள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அதேசமயம், ஜெஸியை அங்கிருந்து அடித்துத் துரத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஒரு கூட்டம் திரண்டிருந்தது. பலத்த பாதுகாப்புடன் ஜெஸி, ஒலிம்பிக் கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

’ஜெஸியின் முன்பு ஜெர்மனி வீரர்கள் ஒன்றுமில்லாமல் போய்விடுவார்களோ’ என ஜெர்மானியர்களுக்கு உள்ளூர பயம்தான். ஜெஸியின் போட்டிகளைக் கூர்ந்து கவனித்தார் ஹிட்லர். நீளம் தாண்டுதலுக்கான தகுதிச் சுற்று. லஸ் லாங் என்ற ஜெர்மானிய வீரர், முதல் வாய்ப்பிலேயே தகுதி பெற, ஹிட்லர் முகத்தில் அத்தனை உற்சாகம். நீளம் தாண்டுதலில் ஜெர்மனி தங்கப்பதக்கம் வென்றே தீர வேண்டும் என்பதற்காகவே ஹிட்லர், லஸ் லாங்குக்கு ரகசியப் பயிற்சிகள் கொடுத்து தயார் செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தார் ஜெஸி. அதுவே அவரைப் பதட்டத்துக்குள்ளாக்கியது.

கவனச்சிதறல். ஜெர்மனி ரசிகர்களில் எதிர்ப்புக் குரல்கள். பதக்கம் வெல்லாவிட்டால் தன்னை அமெரிக்கர்கள் இனவெறியால் எப்படியெல்லாம் குத்திக் கிழிப்பார்கள் என்ற மன அழுத்தம். ஜெஸி தடுமாறினார். தவறுக்கு மேல் தவறு செய்தார். அப்போது லஸ் லாங், ஜெஸியிடம் வந்தார். அன்புடன் பேசினார். அக்கறையும் நம்பிக்கையும் ததும்பும் வார்த்தைகள் பேசி, ஜெஸியின் பதட்டத்தைக் குறைத்தார். ஜெஸியும் லஸ் லாங்கும் நெருங்கிப் பேசுவதைக் கண்டதும் நாஜிக்களின் கண்களில் கனல். தெளிவு பெற்ற ஜெஸி, தெம்புடன் நீளம் தாண்டி, இறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்தார்.
‘நாளை தங்கம் உங்களுக்கே! இன்றே வாழ்த்திவிடுகிறேன்!’ லஸ் லாங் அன்புடன் ஜெஸியின் கைகளைப் பற்றினார். ’இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா!’ ஜெஸி நெகிழ்ந்தார்.

மறுநாள். நீளம் தாண்டுதல்  - இறுதிப் போட்டியில் முதலில் தாண்டிய லஸ் லாங் அபாரமாக புதிய உலக சாதனை படைத்தார். மைதானமே மகிழ்ச்சியில் அதிர, ஹிட்லரின் முகத்தில் கர்வமும் பெருமிதமும். அடுத்த ஓவன்ஸ் நீளம் தாண்ட, ஹிட்லரின் முகம் தொங்கிப் போனது. ஆம். லஸ் லாங்கின் சமீபத்திய சாதனையை சுடச்சுட முறியடித்து புதிய உலக சாதனை. அந்த ஒலிம்பிக்கில் ஜெஸி ஓவன்ஸ், நான்கு பிரிவுகளில் (நீளம் தாண்டுதல், 100மீ, 200மீ, 4X100மீ) தங்கப்பதக்கங்கள்  வென்று புதிய சாதனை படைத்தார். ஆரியர்களே வீரியமானவர்கள் என்ற ஹிட்லரின் பொய்ப் பிரசாரம் அங்கே ஜெஸி ஓவன்ஸால் ஆட்டம் கண்டது. நிறவெறி பிடித்த அமெரிக்கர்களின் முகத்திலும் கரியைப் பூசி நெஞ்சை நிமிர்த்தினார் ஜெஸி ஓவன்ஸ்.

(பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஜெஸி ஓவன்ஸ் : வீடியோ

களத்தில் பல்வேறு விளையாட்டுகளில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியதும் உண்மை. ஆனால், ஒரே ஒரு விளையாட்டில் இந்தியாவை யாரும் நெருங்க முடியவில்லை. ஹாக்கி. அதிலும் சர்வதேச வீரர்களையும் தன் அசாத்தியத் திறமையால் அடக்கி மண்டியிட வைத்தார் ஓர் இந்தியர். அவர்... தியான் சந்த்.1905ல் உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர். 1922ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தவர். ஆகச்சிறந்த ஹாக்கி வீரர். 1928 ஒலிம்பிக்ஸில் இந்தியா ஹாக்கியில் தங்கம் வெல்லக் காரணமானவர் இவரே.

களத்தில் அவரது கட்டுப்பாட்டுக்குள் ஹாக்கி பந்து வந்துவிட்டால், எதிரணியினர் அதைக் கைப்பற்றுவது சிரமம். இவர் ஹாக்கி மட்டைக்குள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறாரா என்று ஒருமுறை ஜப்பானியர்கள் சோதனை செய்து பார்த்ததும் உண்டு. அதற்கு பதில் சொல்லும் விதமாக, ஒரு போட்டியில் சாதாரண வாக்கிங் ஸ்டிக்கை வைத்து, களமிறங்கி கோல்கள் அடித்துக் காட்டினார் தியான் சந்த்.

1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி ஃபைனலில் இந்தியா, அமெரிக்காவை 24-1 என்ற கோல் கணக்கில் புறமுதுகிட்டு ஓடச் செய்தது. அதில் தியான் சந்த் அடித்த கோல்கள் 8.
1936ல் பெர்லினுக்கு இந்தியா சார்பில் 27 வீரர்கள் சென்றிருந்தனர். 4 தடகள வீரர்கள், 3 மல்யுத்த வீரர்கள், பளுதூக்கும் வீரர் ஒருவர், ஹாக்கி அணியில் 19 பேர். ஹாக்கி அணியின் கேப்டனாக தியான் சந்த். இந்தியா சுலபமாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அங்கு எதிரணி ஜெர்மனி. டிரெஸ்ஸிங் ரூமில் பிரிட்டிஷ் தேசிய கீதத்தைப் பாடச் சொல்லி அணி மேலாளர்கள் வற்புறுத்தினர். இந்தியக் கொடியை ஏற்றி, வந்தே மாதரம் பாடலை பாடலைப் பாடிவிட்டுக் களமிறங்கினார் தியான் சந்த்.

ஜெர்மனி வென்றே தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஹிட்லரும் கேலரியில் அமர்ந்திருந்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் ஜெர்மனி விட்டதைப் பிடிக்குமென அதன் ரசிகர்கள் கனவு காண, இந்தியா விஸ்வரூபம் எடுத்தது. இந்திய வீரர்களின் ஆக்ரோஷத்தைச் சமாளிக்க இயலாமல் திணறியது ஜெர்மனி. மைதானத்தில் கைகலப்பு. ஜெர்மனி கோல் கீப்பர் தியான் சந்த் மீது வேண்டுமென்றே மோதியதில் அவரது பல் ஒன்று உடைந்து போனது. முதலுதவி பெற்று வந்த தியான் சந்த், ‘ஜெர்மானியர்களுக்கு பாடம் கற்றுத் தந்தே தீர வேண்டும்’ என்று மேலும் ஆவேசத்துடன் அணியுடன் பரபரவென இயங்கினார். போட்டியின் முடிவில் இந்தியா, 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3 கோல்களை அடித்திருந்த தியான் சந்த், ஹிட்லரை ஆக்கிரமித்திருந்தார்.
(1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ் இந்தியா - ஜெர்மனி ஹாக்கி இறுதிப் போட்டி வீடியோ: https://www.youtube.com/watch?v=095gsjCEg_k)


மறுநாள் ஹிட்லர், தியான் சந்தைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைத்திருந்தார். தியான் சந்த் சென்றார். ‘ஜெர்மனியின் ராணுவத்தில் மதிப்புமிக்க பதவி அளிக்கிறேன். இங்கேயே இருந்துவிடுங்கள்’ என்று வாய்ப்பளித்தார் ஹிட்லர். ‘தங்கள் அன்புக்கு நன்றி. இந்தியாவில் எனக்குப் பெரிய குடும்பம் இருக்கிறது. என்னால் இங்கிருக்க முடியாது’ என்று தன்மையாக மறுத்துவிட்டார் அவர். ஜெர்மனியின் ஹாக்கி அணியில் இணைந்துவிடுமாறு ஹிட்லர் அழைத்ததாகவும், ‘நான் இந்தியன், என் தேசம் தவிர வேறெந்த அணிகளுக்கும் விளையாட விருப்பமில்லை’ என்று தியான் சந்த் பதிலளித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.

1936 பெர்லின் ஒலிம்பிக்கை ஆகச் சிறப்பாக நடத்திக் காட்டியதன் மூலம், ‘ஜெர்மனி யூதர்களின் எதிரி’ என்ற இமேஜ் தூள் தூளாகிப் போயிருந்தது. ஒலிம்பிக்ஸின் முடிவில் சர்வதேச அளவில் ஹிட்லர், மாபெரும் தலைவராக மதிப்பு பெற்றார்.
அடுத்த ஒலிம்பிக் 1940ல் டோக்கியோவில் என்று ஒலிம்பிக் கமிட்டியினர் திட்டமிட்டிருந்தனர். அதை எப்படியெல்லாம் நடத்தலாம் என்று ஜப்பானியர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். ‘உங்கள் யாருக்கும் எதையும் திட்டமிடும் உரிமை கிடையாது. அடுத்தடுத்து உலகில் என்ன நடக்க வேண்டும் என்பதை நானே திட்டமிடுவேன்’ என்று தனக்குள் கொக்கரித்துக் கொண்டார் ஹிட்லர்.


4. தங்கப்பதக்கம் இல்லாத ஒலிம்பிக்!
அவர் பெயர் ஜீயஸ். ஒலிம்பியா மலையில் வாழ்பவர்; வானத்தின் கடவுள்; அதில் தோன்றும் இடியின் கடவுளும் அவரே; கடவுள்களுக்கெல்லாம் அரசரும் அவரே; காமத்தில் கரைகண்டவர்; பெண்களை ஆராதிப்பவர்.  மன்னிக்கவும். கடவுளல்லவா. அப்படிச் சொல்லக்கூடாது. ஏகப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கை அளித்தவர். அதனால், ஏகப்பட்ட கடவுள்களை வாரிசாகக் கொண்டவர். இப்பேர்ப்பட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஜீயஸ் என்கின்றன கிரேக்க புராணங்கள்.
அவரை மகிழ்விப்பதற்காகப் பண்டைய கிரேக்கர்கள்கிரீஸின் ஒலிம்பியா நகரத்தில் விழா எடுத்தார்கள்அதன் ஒரு பகுதியாக தடகளப் போட்டிகளை நடத்தினார்கள்பண்டைய கிரேக்கத்தின் வெவ்வேறு நகரங்களைராஜ்ஜியங்களைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டார்கள்கிமு 776 முதல் கிபி 393 வரை பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் (பொதுவாக ஆண்டுகளுக்கு ஒருமுறை)நடைபெற்றனகிபி 393ல் கிறித்துவ மதத்தை அரச மதமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனஅதன் ஒரு பகுதியாக பாரம்பரிய ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிலர்ஒலிம்பிக் என்ற பெயரில் சிறிய அளவில் போட்டிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தி வந்தனர்இதையெல்லாம் பிரெஞ்சுக் கல்வியாளரும் வரலாற்று ஆய்வாளருமான பியெரி டி கோபெர்டின் கவனித்து வந்தார்அவருக்கு சர்வதேச அளவில் பல தேச வீரர்களை வரவழைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்;பண்டைய ஒலிம்பிக்குக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததுசமூகத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்த கோபெர்டின்பலருடன் இணைந்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். 1894ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார்முதல் நவீன ஒலிம்பிக் போட்டியைஅதன் பிறப்பிடமான கிரீஸில் 1896 ஏப்ரலில் நடத்த முடிவு செய்தார்கள்.இப்படியாக ஒலிம்பிக்குக்கு புத்துயிர் கொடுத்த கோபெர்டின்நவீன ஒலிம்பிக்கின் தந்தையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.
கிமு ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பான்ஏதெனிக் என்ற விளையாட்டரங்கம்பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுமுதல் ஒலிம்பிக்குக்காக மீண்டும் புதுப்பிக்கப்பட்டது, 60 ஆயிரம் பேர் அமரும் வகையில்கிரீஸ்,அமெரிக்காஇங்கிலாந்து,ஆஸ்திரேலியாபல்கேரியாசிலி,டென்மார்க்இத்தாலிஸ்வீடன்,பிரான்ஸ்ஜெர்மனிசுவிட்சர்லாந்து,ஹங்கேரிஆஸ்திரியா ஆகிய 14நாடுகள் முதல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டனஆசியாவிலிருந்து எந்த நாடும் இடம்பெறவில்லைஏப்ரல் அன்று ஆரம்பித்த ஒலிம்பிக்கில் கிரீஸின் அரசர் முதலாம் ஜார்ஜ் கலந்து கொண்டார்.கிரேக்கக் கவிஞர் காஸ்டிஸ் பலாமாஸ் இயற்றிகிரேக்க இசைக்கலைஞர் ஸ்பைரைடான் சமராஸ் இசையமைத்த ‘ஒலிம்பிக் கீதம்’ பாடப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்டவர்களெல்லாம் முறையாகப் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் இல்லைஏதாவது விளையாட்டு கிளப்களில் உறுப்பினராக இருந்தவர்கள்விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள், ‘சும்மா போய்த்தான் பார்ப்போமே’ என்ற ஆர்வக்கோளாறில் வந்தவர்கள் என்று விதவிதமான கேரக்டர்கள் கலந்துகொண்ட ஒலிம்பிக்ஸ் அது.
இந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கே பரிசு வழங்கப்பட்டதுஅதிலும் பட்ஜெட் கட்டுப்படியாகாது என்பதால் தங்கம் கிடையாதுமுதல் பரிசு வெள்ளிப் பதக்கம்ஆலிவ் மாலைஇரண்டாம் பரிசு தாமிரப் பதக்கம்லாரல் மாலைமூன்றாவது இடம்பிடித்தவர் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் எதுவும் கிடையாது.
1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளும் இருந்தன.ஆனால்அதற்கென தனியாக நீச்சல் குளம் கட்டப் பணம் இல்லை. ‘எல்லாரும் படகுல ஏறுங்கஏறியாச்சாகடலுக்குள்ள போப்பா!’என்று நீச்சல் வீரர்களை குறிப்பிட்ட தொலைவுக்கு கடலுக்குள் அழைத்துச் சென்றனர்அங்கிருந்து குதித்து கரையை நோக்கி நீந்தச் செய்தனர்ஆக்ரோஷ அலைகள்கடும் குளிர்கடல் நீச்சலில் அனுபவமின்மை போன்ற காரணங்களினால் பலரும் திணறினர்உயிர் பயம் சூழ மீண்டும் படகைத் தேடினார்கள்.
அந்தக் கடலுக்குப் பழகிய கிரீஸ் வீரர்களையே சுலபமாக முந்திக் கொண்டு சென்றார் அல்பிரெட் ஹாஜோஸ் என்ற ஹங்கேரிய வீரர்அசத்தலாக நீந்தி வேகவேகமாகக் கரையேறினார். 100மீ, 1200மீ ஃப்ரீஸ்டைல் பிரிவுகளில் முதலிடம் பிடித்தார் ஹாஜோஸ். 500 மீட்டர் போட்டியிலும் நீந்த அவருக்கு ஆசைதான்ஆனால், 100மீ போட்டி முடிந்த உடனேயே 500 மீ ஆரம்பித்ததால் ஹாஜோஸால் கலந்து கொள்ள முடியவில்லைமறுநாள், ‘ஹங்கேரியின் டால்பின்’ என்று பத்திரிகைகள் ஹாஜோஸைப் புகழ்ந்தன.
ஹாஜோஸின் நினைவில் தன் பதின்மூன்றாவது வயதில் நிகழ்ந்த மறக்கவியலாத துன்பியல் சம்பவம் நிழலாடியதுஅவர் கண்முன்பாகவே அவரது தந்தை ஆற்றில் மூழ்கி இறந்து போனார். ‘என் அப்பாவுக்கு நீச்சல் தெரிந்திருந்தால் பிழைத்திருப்பார் அல்லவா’ கண்கள் கசிந்தனதந்தையின் இழப்புதான் ஹாஜோஸை வெறியுடன் நீச்சல் கற்க வைத்தது என்பதுசோகமான பின்னணி .
அமெரிக்க வீரரான ராபர்ட் காரெட்குண்டு எறிதலில் பயிற்சி பெற்றவர். ‘கிரீஸ் ஒலிம்பிக்ஸ்ல வட்டு எறியுற போட்டி இருக்குதுகுண்டுக்கு பதிலா வட்டுஅவ்வளவுதான்நீ வேணா போய்ப்பாரு’ என்று ஒருவர் ஆலோசனை சொன்னார்ராபர்ட் தனக்குத் தெரிந்த கொல்லரிடம் வட்டு ஒன்றை செய்யச் சொன்னார்அவர் கற்பனையில் செய்து கொடுத்த வட்டு 14 கிலோ இருந்தது. ‘இவ்வளவு கனமெல்லாம் எறிய முடியாது.உருட்டித்தான் விடணும்வட்டே எறிய வேண்டாம்!’ என்று பின்வாங்கினார் ராபர்ட்.
ஏதென்ஸில் பயன்படுத்தப்படும் வட்டு சுமார் இரண்டே கால் கிலோதான் இருக்கும் என்ற உண்மை தெரிந்தபின்,சந்தோஷமாகப் பெட்டி படுக்கையுடன் ஏதேன்ஸ் கிளம்பினார் ராபர்ட்வட்டு எறிதல் கிரீஸின் பாரம்பரிய விளையாட்டுகிரீஸ் வீரரும் வட்டு எறிதலில் கில்லியுமான பனோஜியோடிஸ் என்பவர்,ஸ்டைலாக வட்டு எறிய மைதானம் அதிர்ந்தது. ‘இப்படித்தான் எறிய வேண்டுமா’ என்று அவரைப் பார்த்து கற்றுக் கொண்டு ராபர்ட் களமிறங்கினார்அவர் எறிந்த வட்டு பார்வையாளர்கள் மத்தியில் சென்று விழமைதானத்தில் சிரிப்பொலிபின் மூச்சைப்பிடித்துமுக்கி முனகி முழு மூச்சுடன் வட்டை எறிந்தார். 29.15 மீ சென்று விழுந்ததுமைதானமே மூர்ச்சையானதுஆம்,ராபர்ட்டுக்கே முதலிடம்தவிரகுண்டு எறிதலிலும் முதலிடம் பிடித்தார். மறக்காமல் தன்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டார் ராபர்ட். அந்தளவுக்கு அவருக்கே அதிர்ச்சியாக இருந்தது, அவரது சாதனை.
1900ல் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கும் ராபர்ட்,வட்டையும் குண்டையும் தூக்கிக் கொண்டு போனார்.வட்டு எறிதலில் ஏதென்ஸில் கைகொடுத்த அதிர்ஷ்டம்,பாரிஸில் கைவிட்டது.முறையான பயிற்சி இன்றி எறிந்ததால் காற்றில் வட்டு சகல திசைகளிலும் பறந்தது.சிலமுறை மரங்களில் மோதி விழுந்ததுராபர்ட் தகுதி இழந்தார்.
அதேசமயம்குண்டு எறிதலில் சுலபமாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்ஆனால்அதில் அவர் கலந்து கொள்ளவில்லை.காரணம்இறுதிப்போட்டி ஞாயிறு அன்று நடைபெற்றது. ‘அடப்போங்கய்யாசன்டே எனக்கு ஹாலிடே!’ என்று ஹாயாக இருந்துவிட்டார் ராபர்ட் காரெட்.
 
முதலாம் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ‘பெண்களா? அவங்க மைதானத்துல இறங்கி விளையாடறது சரிப்படாது. ஒழுக்கம் கெட்டுப் போயிரும். அதுக்கான தகுதியும் திறமையும் அவங்களுக்குக் கிடையாது. போட்டியெல்லாம் சுவாரசியமா இருக்காது. அதனால பெண்கள், தங்களோட மகன்களை திறமையா, வலிமையா வளர்த்து போட்டிக்கு அனுப்புற வேலையைப் பார்த்தா மட்டும் போதும்’ என்று பெண்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைத்தார் ஒலிம்பிக்கின் தந்தை கோபெர்டின். தவிர, பண்டைய ஒலிம்பிக்கிலும் பெண்களுக்கு இடமிருந்ததில்லை.

அது பல பெண்களுக்குக் கோபத்தைக் கொடுத்தது. அதில் ஒரு பெண் மட்டும், இந்தத் தடையை எல்லாம் மீறி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்க்கமாகக் களமிறங்கினாள். தான் மட்டும் அதில் கலந்து கொண்டு சாதித்துவிட்டால், தனக்குப் பெயர் கிடைக்கும், புகழ் கிடைக்கும், ஆணாதிக்க மனப்பான்மையை ஒழியும். பெண்களும் விளையாடுவதற்கான தடை உடையும். அனைத்தையும்விட தன் வறுமைக்கு ஒரு தீர்வும் உண்டாகும். யோசித்த அந்தப் பெண், மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்குவதற்காக ஆண் வீரர்கள் குவிந்திருந்த அந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள், தனி ஒருத்தியாக.

No comments:

Post a Comment