Powered By Blogger

Friday, August 19, 2016

பங்குச் சந்தையில் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்!



பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதித்தவர்களைவிட இழந்தவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். இதை ஒரு சூதாட்டம் என்று பல பேர் சொல்லி இருப்பதை  கேட்டு இருப்பீர்கள். சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையானது, இப்போது வெறும் 8 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதைச் சூதாட்டம் என்று யாரும் கூற முடியாது. இதைப்போலத்தான் பங்குச் சந்தையில் பங்குகள் விலை ஏறுவதும், இறங்குவதும். சில விஷயங்களை கடைபிடித்தால் பங்குச்சந்தை வருமானத்துக்கு நல்ல வழிதான்.

1. சொல் புத்தி 
எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதை விட சுயமாகச் சிந்தித்து செயல்படுவதே சிறந்தது. பங்குச் சந்தையில் இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்பதற்காக எந்த ஒரு பங்கையும் வாங்கக் கூடாது, விற்கவும் கூடாது. நீங்களே சுயமாக சிந்தித்து அலசி ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுத்துச் செயல்படுவதே நல்லது. 

2. ஒரே நாளில் ராஜா 
ஒரு நிலத்தையோ அல்லது தங்கத்தையோ வாங்கிய உடனே அதன் விலை ஏறுவதில்லை. அதைப்போலத்தான் பங்குச் சந்தையும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பிறகு ஒரே நாளில் அதன் விலை அதிக உச்சத்தை எட்ட வேண்டும்; அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையைத் தவிர்க்க வேண்டும். பங்குச் சந்தையில் முதலீடுகளைப் பொறுத்தவரை குறுகிய கால நோக்கத்தில் முதலீடுகளைச் செய்யாதீர்கள்; பணத்தைப் பன்மடங்காக பெருக்க நீண்ட காலத்திற்கு முதலீடுகள் செய்து காத்திருப்பது அவசியம். 

3. ஸ்டாப் லாஸ் 
பங்குச் சந்தையில் எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றோம் என்பதை விட எவ்வளவு பணம் இழக்காமல் இருக்கின்றோம் என்பது மிக முக்கியம். பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்டாப் லாஸ் என்பது நிச்சயம் தெரிந்து இருக்கும். ஆனால், இதைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதே கிடையாது. இதைச் சரியாக பயன்படுத்தி இனிமேலாவது உங்கள் பணத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒட்டுமொத்த பணத்தையும் ஒரே நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதை தவிருங்கள். ஒரு குறிப்பிட்ட 5 துறைகளைத் தேர்ந்தெடுத்து அந்தத் துறையில் உள்ள சிறந்த நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள். 

4. நிறுவனங்களை நம்பாதீர் 

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை எந்த ஒரு புரோக்கிங் நிறுவனத்தையும் நம்பாதீர்கள். ஏனெனில் பெரும்பாலான புரோக்கிங் நிறுவனங்கள் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திலிருந்து புரோக்கரேஜ் எடுப்பதில்தான் குறியாக இருப்பார்கள். ஆகையால் இவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள். உதாரணத்திற்கு, ஆப்சனில் டிரேட் செய்தால் பணத்தை அல்லலாம் என்பார்கள். ஆனால் அதில் பலர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. 

5. டிப்ஸ் வேண்டாமே 
பங்குச் சந்தையைப் பற்றி போதிய அறிவின்றி வர்த்தகம் செய்யாதீர்கள். போனில் அழைத்து Buy/Sell டிப்ஸ், மெசெஜ் மூலமாக வரும் டிப்ஸ் போன்றவற்றைத் தவிருங்கள். பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதற்கு ஆர்வமாக இருந்தால் மட்டும் போதாது; அது தொடர்பாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். பங்கு வர்த்தகம் எப்படிச் செயல்படுகிறது; பங்குகள் விலை எப்படி ஏறுகிறது; ஏன் இறங்குகிறது உட்படப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இதை ஓரளவிற்கு கற்றுக்கொண்ட பிறகு பங்குச் சந்தையில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் முதலீடு செய்யுங்கள். 

No comments:

Post a Comment