Powered By Blogger

Monday, August 3, 2015

வரலாற்றில் கேமரா

ன்றைய நவீன உலகத்தில் கேமரா என்பது தவிர்க்கவே முடியாத ஒரு கருவியாக மாறியிருக்கிறது. உலகத்தில் ஏதாவது ஒரு வடிவத்தில் கேமராவுடன் உறவு கொண்டாடாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். கேமராவுக்கு முன்னோ அல்லது கேமராவுக்குப் பின்னோ நின்று ஆவணப்படுத்திக் கொண்டேயிருக்கிறான்.

நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியத் தேவையாகிவிட்ட இந்த கேமராவின் பிறப்பு, அதன் பரிணாம வளர்ச்சிகள், கடந்து வந்த பாதைகள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவை. ஓவியம், இசை, இலக்கியம் உள்ளிட்ட எந்தக் கலைகளுக்கும் இல்லாத சிறப்பு இந்த கேமராவுக்கும், அது உருவாக்கிய புகைப்படத்துக்கும் மட்டுமே இருக்கிறது. எந்தக் கலைகளுக்கும் இதுதான் ஆரம்பம் என்று துல்லியமான ஆதாரங்களோடு நம்மால் கூற முடியாது. ஏதோ ஒரு வகையில் ஆவணப்படுத்தப்பட்டதில் இருந்துதான் அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நவீன உலகத்தின் விஞ்ஞான கண்டுபிடிப்பான கேமரா அப்படி அல்ல. இதுதான் உலகத்தில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என்று ஆணித்தரமாக நம்மால் சொல்லிவிட முடியும்.

கடந்த காலத்தின் அரசியல், வரலாறு, போர் மற்றும் புரட்சி, அவை ஏற்படுத்திய அழிவுகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை உண்மையின் சான்றாக படம் பிடித்து நம் கண் முன்னே நிறுத்துகிறது. புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு 175 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தக் குறுகிய காலத்திலேயே, அனைத்து மக்களையும் அது கவர்ந்து வைத்திருப்பதற்குக் காரணம்... படிப்பறிவில்லாத பாமரனும் அதை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி இருப்பதுதான். மேலும், உலக நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதிலும் அதன் உண்மை நிலையை உலகுக்கு உடனுக்குடன் புரிய வைப்பதிலும் புகைப்படத்துக்கு நிகர் வேறில்லை.

'கிளிக்’ என்ற மெல்லிய சத்தத்துடன் ஒவ்வொரு முறையும் இதன் ஷட்டர்கள் திறந்து மூடும்போதும், அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றை விழுங்கி தன்னுள் ஆவணமாக பதிவு செய்துகொள்கிறது. நூற்று எழுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றின் நேரடி சாட்சியாக இருந்து கொண்டிருக்கும் இந்த கேமரா உருவாக்கிய படங்கள் மூலம் உலகத்தின் கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்கவே இந்தப் பயணம்.

1. நாப்பாம் சிறுமி 

உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது  இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் நிர்வாணமாக ஒரு சிறுமி ஓடிவரும் இந்தப் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் கதிகலங்கச் செய்துவிடும். தெற்கு வியட்நாம் போட்ட நாப்பாம் குண்டினால் தாக்குதலுக்குள்ளான இந்தச் சிறுமி ஓடி வரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்துப் பார்த்தது. சுமார் 19 வருடங்களாக நடந்து கொண்டிருந்த வியட்நாம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர இந்தப் படம் மிகப் பெரிய காரணமாக அமைந்தது.
1954-ல் வடக்கு வியட்நாம் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கொண்டது. அதன் பிறகு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்திருந்த வியட்நாமை, சோவியத் யூனியன் மற்றும் சீனாவைப்போல ஒரே நாடாக ஆதிக்கம் செலுத்த விரும்பியது வடக்கு வியட்நாம். அதேசமயம் தெற்கு வியட்நாமும் தன்னுடைய சுயாட்சியை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்காக வட அமெரிக்காவுடன் சேர்ந்து வடக்கை எதிர்க்க விரும்பியது. இந்தப் போரில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக நேரடியாகப் பங்கேற்றனர். சீனா மற்றும் ரஷ்யாவும் வடக்கு வியட்நாமுக்கு அதிகளவில் ஆயுதங்களையும், போர் உத்திகளையும் நேரடியாக கொடுத்து வந்தது. இந்தப் போரின் உச்சத்தில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும், 11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டுபோயினர்.

போர் உச்சத்தில் இருந்த காலகட்டமான 1972 ஜூன் 9-ம் நாள் தெற்கு வியட்நாம் பெட்ரோலிய ரசாயனம் கொண்ட நாப்பாம் குண்டினை தெற்கு வியட்நாமில் இருக்கும் (அப்போது வடக்கு வியட்நாமின் கட்டுப்பாட்டில் இருந்த) 'தராங்பாங்க்’ என்ற கிராமத்தில் வீசியது. இந்த நிலையில்தான் அந்தக் கிராமத்தில் இருந்த எட்டு வயதான சிறுமி பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள். அப்போது சிறுமி கிம் ஃப்யூக்கின் உடைகள் முழுவதும் எரிந்து உடலிலும் தீக்காயம் பரவிட்ட நிலையில் ''சுடுது சுடுது'' என்று கதறியபடியே ராணுவம் இருந்த பகுதியை நோக்கி ஓடி வருகிறாள்.

அப்போது அவளுக்கு சற்று தொலைவில் இறந்துபோன ஒரு குழந்தையுடன் அலறிக்கொண்டு வந்த ஒரு மூதாட்டியை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் புகைப்படம்  எடுத்துக் கொண்டிருந்த அசோசியேட்டட் பிரஸ்சின் புகைப்பட பத்திரிகையாளர் நிக் வுட் (Nick Ut) தனது வியு ஃபைண்டர் ஓரத்தில் நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியை பார்த்தார். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, தன் கேமராவை அவளை நோக்கி திருப்பினார். மற்ற புகைப்படக்காரர்கள் அனைவரும் அந்த மூதாட்டியையும் இறந்துபோன குழந்தையையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, நிக் வுட் மட்டும் நிர்வாணமாக ஓடிவந்த சிறுமி கிம் ஃப்யூக்கை படம் எடுக்கத் தொடங்கினார்.

அந்தச் சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு நின்றுவிடாமல், அவளுக்கு முதலுதவி செய்து தன் காரிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிர் பிழைக்கவும் வைத்த நிக்குக்கு அப்போது வயது 19 மட்டுமே. பிறகு, தன் அலுவலகத்துக்குச் சென்ற நிக், அந்தப் புகைப்படங்களை பிரிண்ட் போட்டு ஆசிரியர் குழுவினரிடம் காட்டியபோது, சிறுமி நிர்வாணமாக இருப்பதைக் காரணமாக காட்டி முதலில் அவர்கள் அதை பிரசுரிக்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்தப் படத்தை பிரசுரித்தது.

இதன் தொடர்ச்சியாக இந்தப் படம் உலகில் இருந்த அத்தனைப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் போருக்கு எதிரான படமாக அடையாளப்படுத்தப்பட்டது. உலக நாடுகளின் கடுமையான கண்டனத்தினாலும், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பினாலும் 1973-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அமெரிக்க ராணுவம் வியட்நாமை விட்டு வெளியேறியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல், வடக்கு வியட்நாமிடம் தெற்கு வியட்நாம் சரணடைந்தது. 1976-ல் ஜூலை 2-ல் 'வியட்நாம் சோசலிசக் குடியரசு’ (The Socialist Republic of Vietnam) உருவானது. இந்தப் படத்துக்காக நிக்குக்கு 1973-ல் நோபல் பரிசுக்கு இணையான பத்திரிகை துறையில் உயரிய விருதான ’புலிட்சர் விருது’ வழங்கப்பட்டது.

இந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுமிக்கு இப்போது வயது 52. தற்போது கனடாவில் வசித்து வரும் இவரை 1994-ம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக (UNESCO Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார். 1997-ல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம் ஃப்யூக். தற்போது இதனுடன் பல கிளை நிறுவனங்கள் இணைந்து 'Kim Phuc Foundation International' என்ற பெயரில் இயங்கி வருகிறது.

கால்கள் பிணைக்கப்பட்டு, இரண்டு கைகளும் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் தலைப்பாகையுடன் இருவர் கயிற்றில் தொங்கவிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பின் இருக்கும் வரலாறு, முழுக்க முழுக்க சோகத்தால் நிரம்பியது. இவர்களைச் சுற்றி இருக்கும் பத்து வீரர்களும் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனி ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்களே. 1858-ல் சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்த பிறகு பிரிட்டிஷுக்கு எதிராகப் போராடிய இந்திய வீரர்களைத் தூக்கில் போடும்போது போட்டோகிராபர் பெலிஸ் பியட்டோவால் (Felice Beato) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படமே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரியத்தை உலகறியச் செய்தது.

1857 மே மாதம் 10-ம் தேதி டெல்லிக்கு அருகே, மீரட்டில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் உருவான இந்தக் கலகம் கங்கை சமவெளி, மத்திய இந்தியா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்குக் காட்டுத்தீயாகப் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய பிறகு, 1958 ஜூன் 20-ம் தேதிதான் முடிவுக்கு வந்தது. கலகமாகத் தொடங்கி புரட்சியாக உருவெடுத்த இந்தப் போராட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது மட்டுமல்லாமல், கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி பார்வையில் இந்தியா வரக் காரணமாக அமைந்தது.

1820-ல் இந்தியாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலை கலாசாரத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிரிட்டிஷ், பிரிந்திருந்த பல்வேறு சமஸ்தான நிலப்பரப்புக்களையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டது. மேலும், ‘லார்டு டெலோசி’யின் மறுப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் வாரிசு இல்லாத இந்திய அரசர்களின் நிலப்பரப்புக்களை, தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆரம்பித்தது. இதனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறுநில மன்னர்களின் அதிருப்தி வலுக்கத் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் பிராமணர்களுக்கு சமஸ்தானத்தில் கிடைத்துக்கொண்டிருந்த அந்தஸ்துகளும் வருவாயும் இச்செயல்களால் அதிகமாக பாதிக்கப்பட்டது.
பெண் விடுதலை, பெண்களுக்கு மறுமணம் போன்றவற்றை ஆங்கிலேயர்கள் சட்டரீதியாக அங்கீகரித்து இந்துக்களின் நம்பிக்கைகளை உடைத்தெறிய முயற்சி செய்தனர். சாதி கட்டமைப்புகளை ஒதுக்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பியதோடு, பாரம்பரிய இந்து, இஸ்லாமிய கல்வி முறைகளை மேற்கத்திய மயமாக்கியது, பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில், வங்காள ராணுவத்தில் ’என்ஃபீல்ட் ரைஃபில்’ (Enfield Rifle) என்ற துப்பாக்கியை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ். நீண்ட நாட்களாக குமுறிக் கொண்டிருந்த மக்கள் துள்ளியெழ உடனடிக் காரணமாக இது அமைந்தது. ஏனெனில், இந்தத் துப்பாக்கியின் தோட்டா முனையில் மாடு மற்றும் பன்றிகளின் இறைச்சியால் ஆன குப்பிகளை கடித்துத் துப்ப வேண்டியிருந்தது. அதனால், இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் கடுமையான கோபம் அடைந்தனர். இவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகத்தான் 1857-ல் மங்கள் பாண்டே என்கிற 29 வயது சிப்பாய், மேற்குவங்கப் பகுதியின் ராணுவத் தளத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டார். இதனைத் தொடர்ந்து மங்கள் பாண்டே உடனே கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். சிப்பாய்க் கலகம் உருவாக இந்தச் சம்பவமே தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இந்தப் புகைப்படத்தை எடுத்த பெலிஸ் பியட்டோ, பிரிட்டிஷ் இத்தாலியனைச் சேர்ந்தவர். இவர் 1857-ல் இந்தியாவில் நடந்த கலவரத்தைப் படம் பிடிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தால் லண்டனில் இருந்து அனுப்பப்பட்டவர். இந்தக் காலகட்டத்தில் இவர் எடுத்த அறுபது புகைப்படங்கள்தான் இன்றளவும் சிப்பாய் கலவரத்தின் நேரடி சாட்சியாக இருக்கிறது. இந்தப் புகைப்படம் எடுப்பதற்கு நீண்ட நேரம் ஒளி ஊடுறுவும் முறையை (Long Exposure time) பயன்படுத்தினார் பியட்டோ. கல்கத்தா வந்து இறங்கியவர் பல இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி இழுவண்டியின் மூலம் வட இந்தியாவை நோக்கி பயணித்தார். செல்லும் வழி நெடுகிலும் சிப்பாய் கலகத்தால் ஏற்பட்ட சிதைவுகளையும் அழிவுகளையும் பதிவு செய்துகொண்டே சென்றார்.

சிப்பாய் கலகத்துக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷாரை கூறுபோட்டவர்கள் தமிழர்கள். இருந்தபோதிலும், 1857-ல் நடந்த சிப்பாய் புரட்சியே முதல் சுதந்திரப் போராக இன்றளவும் பேசப்படுவதற்குக் காரணம் உலகத்தின் முதல் போர் புகைப்படக்காரரான பெலிசி பியட்டோ எடுத்த இந்தப் புகைப்படம்தான்.

No comments:

Post a Comment