Powered By Blogger

Monday, April 27, 2015

தனிமையை இனிமையாக்கலாம்!


னிமை... எந்தத் துறையைச் சேர்ந்தவரானாலும் பாரபட்சம் இன்றி, அனைவரையும் கதிகலங்க வைக்கும் ஒரு உணர்வு. தனிமையிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளவே உலக மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதாக பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்கு முந்தைய தலைமுறையினர் இதே காரணத்துக்காகத்தான் தொலைக்காட்சிகளுக்கு அதிக நேரம் செலவழித்தார்கள்.

"தனிமை நம்மை அரைப் பைத்தியமாக்குகிறது. அதிலிருந்து  தப்பிக்க நாம் ஒரு துணையை நாடுகிறோம். அவர்களோ நம்மை முழு பைத்தியமாக ஆக்கிவிடுகிறார்கள்" என்கிறார் வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வரும் ஒரு பிரபல எழுத்தாளர்.
"தனிமை ஒரு நோய் கிடையாது. தனிமையில் இருந்து தப்பிக்க ஆலோசனைகளே போதுமானது. சிகிச்சைகள் தேவையில்லை ” என்கிறார் மனநல மருத்துவர் திருநாவுக்கரசர்.

தனியாக இருப்பதற்கும், தனிமையில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சிலர் தங்களைச் சுற்றி நிறைய மக்கள் இருந்தும் தாங்கள் தனிமையாக இருப்பதாகவே உணர்வார்கள். இனி பலரின் தனிமைக்கான  காரணங்களைப் பார்ப்போம்.

தனிமையாக உணர காரணங்கள்

தோற்றம்:

ஒரு நபரின் தோற்றமானது, மற்றவர்களின் தோற்றத்துடன் ஒப்பிடும்போது வேறுபட்டால், ' நான் மற்றவர் கள் போல் இல்லை, என்னிடம் இந்த குறையிருக்கிறது' என்ற உணர்வும், எதிர்மறையான எண்ணங்களுமே அவரை தனிமைக்குள் தள்ளிவிடும். மற்றவர்களோடு இயல்பாக பழக விடாது. இந்தப் பிரச்னை உள்ளவர் களிடம் சுற்றத்தார் சகஜமாக பேசி, பழகினால் அந்த உணர்வு அகன்றுவிடும். அல்லது அந்த நபர் ஒரு மன நல மருத்துவரை அணுகி தனது குறைகளைத் தெரிவித்து ஆலோசனைகளைப் பெறலாம். தோற்றத்தால் ஏற்படும் தனிமை உணர்வைக் குணப்படுத்த, சில நேர ஆலோசனைகளே போதுமானது.

அனுபவங்கள்:

மோசமான அனுபவங்களும் தனிமை உணர்வை ஏற்படுத்தி விடக்கூடும். அனுபவங்கள் தந்த அச்சம், நினை வில் நிற்கும் துரோகங்கள், அவமானங்கள், நிறைவேறாத எதிர்பார்ப்புகள் அவர்களைத் தனிமையாக இருக்க வைக்கும். பிறரிடம் சொல்லும் ரகசியம் காக்கப்படாமலே போகலாம், நட்பாகி துரோகம் செய்த அனுபவம் மீண்டும் கிடைக்கலாம் என்ற  எண்ணங்களே அவர்களை தனிமைக்கு கடத்தும். இந்த பழைய சோகமான அனுபவங்களை மறக்கடிக்கக்கூடிய அளவுக்கு நல்ல அனுபவங்கள் ஏற்பட்டால் இந்த பிரச்னைக்கு  தீர்வு கிடைத்து விடும்.
வயது:

தனிமைக்கு மிக முக்கிய காரணியாக இருப்பது வயது. நம் நாட்டில் 45 சதவிகிதத்துக்கு மேலான முதியவர்கள் தனிமையில் இருப்பதுபோல் உணர்வதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்கள், கேட்கும் திறன் பாதிக்கபட்டவர்கள், கண் பார்வை இழந்தவர்களே இதில் அதிகம். கான்பூரில் உள்ள முதியோர் இல்லங்களில், எத்தனை சதவீத முதியவர்கள் தனிமையில் அவதிபடுகிறார்கள் என்று சமீபத்தில் சர்வே நடத்தபட்டது.

அந்த சர்வேயில் ஒரு முதியோர் இல்லத்தை தவிர மற்ற முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியவர்கள், தாங்கள் தனிமையிலே  இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அந்தக் குறிப்பிட்ட முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களிடம் இது பற்றி கேட்டபோது 'நாங்கள் நொடி பொழுதும் சும்மா இருப்பதில்லை. தினமும் ஏதேனும் சமூக பிரச்னையில் தலையிட்டு அதற்கு தீர்வு காண முயற்சிக்கிறோம்.

ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டு கொண்டே இருக்கிறோம். அதனால் எங்களுக்கு தனிமை என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று பதிலளித்து இருக்கிறார்கள். வயோதிகத்தில் வரும் தனிமையை போக்க, எப்பவும் நம்மை பிசியாக வைத்திருப்பது நல்லது.
மரபியல்:

சில நோய்களைப் போல தனிமையும் மரபு சார்ந்ததே. ஆனால், அது முழுவதுமாக அல்ல, பாதி மரபு சார்ந் தது என்கிறது ஆராய்ச்சி. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இரட்டையர்களை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு அவர்களின் மனநிலையை ஆராய்ந்தார்கள். அதில், ஒருவர் தான் வெறுமையாகவும், தனிமையாகவும் உணர்கிறேன் என்று சொன்னால் அடுத்தவரும் அதே நேரத்தில் வெறுமையாகவும், தனிமையாகவும் உணர்வதாக தெரிவித்து இருக்கிறார். இது நூற்றுக்கு 48 சதவிகித நேரங்களில் சரியாக இருந்துள்ளது. 

இதைதான் நம்மூரில் 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்பார்கள். தனிமை, மரபு சார்ந்து ஏற்பட ஐம்பது சதவீத வாய்ப்பு இருப்பதாகவே மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள ஐம்பது சதவிகிதம் சமூகம், சூழலைப் பொறுத்தது.

சமூகம், சூழல்

சொந்த ஊரை விட்டு வெளி இடங்களுக்கு கல்வி நிமித்தமாகவோ, வேலை நிமித்தமாகவோ பலர் இடம் மாறுகிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் புது இடம் தனிமை உணர்வை ஏற்படுத்தும். அங்குள்ள கலாச்சாரத்துக்கு ஏற்றார்போல் மாறுவதற்கு, எல்லாருக்குமே கொஞ்சம் காலம் பிடிக்கலாம். பேசுவதற்கு கூட மொழி ஒரு பிரச்னையாக இருக்கும். இந்த உலகத்தில் இருந்து பிரித்து வைக்கப்பட்ட பொருளாகவே தங்களை நினைத்து கொள்வார்கள். காலப்போக்கில் இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும்.
திருமணம்:

திருமணமாகாதவர்கள், திருமணமாகி பிரிந்தவர்கள், காதலில் தோல்வி அடைந்தவர்கள் அதிகம் தனிமையை உணர்பவர்களாக இருப்பார்கள். குழந்தைப் பருவத்தில் தாய், தந்தை. பதின் பருவத்தில் நண்பர்கள். பிறகு காதலியோ, மனைவியோ. திருமணத்துக்கு பிறகு குழந்தைகள், அதன்பிறகு பேரப் பிள்ளைகள் என  ஒவ்வொரு வயதிலும் மனிதனுக்கு ஒரு உறவு தேவைப்படுகிறது.

இந்த உறவுகள் அந்தந்த காலகட்டத்தில் எதிர்பார்ப்பது போல் இல்லாமல் போனால், மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி சம்பந்தப்பட்டவரை யாருடனும் சகஜமாக பழகவிடாதபடி செய்துவிடும். அவர்கள் எப்போதும் கப்பல் கவிழ்ந்துவிட்டது போன்ற மனநிலையுடன் இருப்பார்கள்.  இந்த உலகின் மீதான வெறுப்பு உணர்வு தொற்றிக் கொள்ளும். அந்த வெற்றிடத்தை நிரப்ப குறிப்பிட்ட அந்த உறவோ அல்லது வேறு ஒரு உறவு கிடைத்துவிட்டால் இதிலிருந்து மீளலாம்.

தனிமையாக உணர்வது,  உறவை இன்னும் இணைக்கமாக வைத்து கொள்ள உதவும் சிக்னலே. அது பெரிய பிரச்னையே இல்லை.  வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல் என்றாவது உங்கள் மனதில் இருக்கும் வெற்றிடத்தை யாரேனும் நிரப்புவார்கள். அதுவரை, நீங்கள் பிறர் அன்பு செலுத்தி கொண்டே இருங்கள்.  தனிமை வெறுமை அல்ல... இனிமை என்பதை உணர்வீர்கள்.  
    
    
தனிமை அறிகுறிகள்:
    
* வாட்டும் தனிமை

* காரணமே இல்லாமல் சோகமாகவே இருப்பது.

* ஒருவிஷயத்தை யாரிடமாவது பகிர வேண்டும் என்று நினைத்து, கடைசியில் பகிர ஆள் இல்லாமல் அந்த விஷயத்தை  நிராகரிப்பது.

* என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை என வருத்தப்படுவது.

* இந்த நேரத்தில் யாராவது என்னுடன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பது.

* மற்றவர்களின் நட்பை பார்த்து பொறாமைப்படுவது.

* மற்றவர்கள் நம்மை விலக்கி வைத்திருப்பதாக நினைப்பது.

* யாராவது அனுப்பிய குறுந்தகவலையோ, அவர்களுடன் பழகிய நாட்களையோ மறுபடியும், மறுபடியும் எண்ணி பார்ப்பது.

இவற்றில் எல்லாவற்றுக்கும் 'ஆமாம்' என்று நினைத்தால், நீங்கள் பயங்கரமான தனிமையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 
    
பாதிப்புகள்:

மனம் மட்டுமல்ல... உடலும் பாதிக்கும்

இரவில் தூக்கம் வராதவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் தனிமையில் இருப்பவர்களே. தனிமையில் இருப்பவர்களுக்கு மூளை எப்போதும் விழிப்புடனே இருக்கும். இதனால், தூக்கத்தில் 'திடீர்' என ஏதேனும் நினைப்பு வந்து தூக்கத்தை கலைத்துவிடும்.  தொடர்ந்து தூக்கம் வருவதில் சிரமங்கள் இருக்கும். எப்போதும் இறுக்கமாக உணர்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய தமணி வீக்கமடையும். முகத்தில் சிரிப்பு மறைந்து போகும்.
தனிமையிலிருந்து மீள வழிகள்:

தனிமையில் தவிப்பவர்கள், நம்மை கரையேற்ற யாரேனும் படகோடு வருவார்கள் என காத்திருக்காமல் எதிர் நீச்சலடித்து கரைச் சேர முயலவேண்டும்.ஏதேனும் செல்ல பிராணி வளருங்கள். அதனுடன் நேரத்தை செலவிடுங்கள்.  தினமும் புத்தகம் படிப்பது, நல்ல இசை கேட்பது, பழைய புகைப்பட ஆல்பங்களை பார்ப்பது, பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் வாரம் ஒரு முறை பேசுவது, பிடித்த வேலையில் ஈடுபடுவது தனிமையை போக்கும் அருமருந்துகள்.

பிறரை மகிழ்விக்க நம்மால் ஆன உதவிகளை செய்யலாம். ஏதேனும் சமூகத் தொண்டில் ஈடுபடுங்கள். இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்கு பயணிக்கலாம்

No comments:

Post a Comment