உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தபொழுது இல்லை "இது தவறு!" என அழுத்தமாகச் சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது. சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்றப் போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்துக் கொண்டிருந்தார்.
தட்டான்பூச்சி, மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டுகள், அணில்கள், புறாக்கள் என்று இவற்றைச் சேகரித்து ஆய்வு செய்கிற ஆர்வம் சிறுவனாகவே அவரிடம் இருந்தது. அப்பா நொந்தே போனார் "உனக்குப் படிக்கவே வரலை; நாய் பின்னாடி ஓடுறது .எலி பிடிக்கிறது இதுதானா உனக்கு தெரிஞ்சது .குடும்ப மானமே உன்னால போகுது!" எனத் தன் மகனைப் பார்த்து சொன்னார் அந்த அப்பா.
அடிப்படையில் மருத்துவம் படிக்கப்போன டார்வின், அங்கே சிறுவன் ஒருவன், கதறக்கதற அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்த்து வெறுத்துப்போனார். (அப்பொழுது மயக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை). கூடவே அங்கேயும் போய் எலிக்கு நான்கு மீசை இருக்கிறது, தவளைக்கு கால்கள் சவ்வு போல உள்ளன என்றெல்லாம் குறிப்புகள் எடுத்தார்.
அப்பாவின் ஆலோசனைப்படி 'இயற்கையியல் வல்லுநர்' ஆனார்.
தென்அமெரிக்காவின் கனிம வளங்களை காணச்சென்ற HMS பீகிள் எனும் கப்பலில் ஐந்தாண்டுகள் உலகைச் சுற்றி வந்த பொழுது பல்வேறு அற்புதங்களைக் கண்டார். பல விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தார். அவை குறிப்பிட்ட வேறு சில உயிரினங்களின் எலும்புகளோடு ஒத்துப்போவதை பார்த்தார் .சில அழிந்திருந்தன. அவையே மாற்றம் அடைந்து தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கும் என உணர்ந்தார். என்றாலும் இவற்றை அவரால் உடனே இணைத்துப் பார்க்க முடியவில்லை.
அப்பொழுது ஒரு பறவையின் மூக்கு அவருக்கு அறிவின் சாளரங்களைத் திறந்து விட்டது. காலபாக்கஸ் தீவுகளில் பின்ச் பறவைகளைக் கண்டார். ஒருதீவில் கடலையைக் கொத்த பட்டையான மூக்கோடும், எலியை தின்ன கூர்மையான மூக்கு இன்னொரு தீவிலும், புழுவை வளைந்து நெளிந்து சாப்பிட வளைந்த மூக்கு மற்றொரு தீவிலும் இருப்பதைக் கண்டார். ‘பயன்தரக்கூடியவை அடுத்த தலைமுறைக்கு வந்துசேரும். பயனற்ற மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்துவிடும்' என்று சொன்னார்.
பதினேழாயிரம் விலங்கு, பறவை, படிமங்கள், பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகளோடு; மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதில் தொடங்கி எண்ணற்ற முடிவுகளைப் பெற்றிருந்தாலும் வாயைத் திறக்கவே இல்லை டார்வின். பத்து ஆண்டுகள் அமைதியாக இருந்தார். எக்கச்சக்க எதிர்ப்புகள் வரும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. வாலஸ் என்கிற அறிஞரும் இதே போல இயற்கைத்தேர்வை பற்றி எழுதியிருந்தார். அவரின் தாள்கள் தொலைந்து போயிருந்தன. இருந்தாலும் டார்வின், அவர் பெயரையும் இணைத்தே வெளியிட்டார். மனிதனைக் கடவுள் படைத்தார் என்பதில் இருந்து மாறுபட்டு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற பரிணாமக்கொள்கை அதில் தான் இருந்தது.
அவர் கண்டுணர்ந்த உண்மைகளின் அடிப்படையில் டார்வின் மூன்று முக்கிய கூறுகளை அவர் விளக்கினார்.
1. மாறுபாடு (உயிரினங்கள் இடையே நிலவுவது )
2. மரபு வழி (உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி )
3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலின் மாறுதலுக்கு ஏற்ப இனப்பெருக்க மாற்றங்கள் மற்றும் உடலமைப்பில்,பல்வேறு குணங்களில்
உண்டாகும் மாறுபாடுகள் )
பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர். பல மதவாதிகள் இவரைக் குரங்கு என சித்தரித்தார்கள். பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். அவரின் பிறந்தநாளைப ‘பேய் தினம்’ என்று வேறு அறிவித்தார்கள். காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார். கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள்.
மதத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனச் சொன்ன அவர், கடவுளைப் பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை. அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். உலகைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்" எனச் சொன்ன அவர் இறக்கிற பொழுதும் மனைவியிடம் காதல் மொழி பேசினார். 'நீ என்னைக் கவனித்துக்கொள்வாய் என்றால், அதற்காகவே நான் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கத் தயார்' என்று சொல்லியபடியே அவரின் இறுதி மூச்சு அடங்கியது. ஒன்றரை நூற்றாண்டு கழித்து அவரின் கோட்பாட்டை சர்ச் தவறென்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டது.
-
No comments:
Post a Comment